Articles

மகிழ்ச்சிக்கு ஒரு மந்திரசாவி

மகிழ்ச்சிக்கு ஒரு மந்திரசாவி

மகிழ்ச்சிக்கான மந்திரசாவி எங்கே இருக்கிறது? அது நமது மனதிற்குள்தான் இருக்கிறது. அதனால் அதை தேடி வெளியே எங்கும் அலையவேண்டியதில்லை. மனதை அமைதியாகவும், திருப்தியாகவும் வைத்துக்கொண்டால் மகிழ்ச்சியை எளிதாக அனுபவிக்கலாம். மனஅழுத்தமே மனமகிழ்ச்சிக்கு தடையாக இருக்கிறது. மனஅழுத்தத்தை போக்கும் வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

மனதை திறப்போம்

நமக்கு ஏற்படும் பிரச்சினைகள்தான் நமது மனஅழுத்தத்திற்கு காரணம். ‘பிரச்சினையின் தன்மையை முழுமையாக புரிந்துகொண்டாலே, அந்த பிரச்சினையில் பாதி தீர்ந்துவிடும்’ என்று அனுபவஸ்தர்கள் சொல்வார்கள். அது உண்மைதான். பிரச்சினையின் உண்மையான காரணம் என்ன என்பதை சரியாக புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் டென்ஷனை உருவாக்குகிறது. டென்ஷன் மனதை அலைகழிக்கும்போது, நெருக்கமான நண்பரிடம் அந்த பிரச்சினையை பற்றி மனம் திறந்து பேசுங்கள். அதிலும் மனஅழுத்தம் குறையாவிட்டால், மனோதத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.


நினைப்பதை எழுதுங்கள்

நீங்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும்போது, உங்கள் மனதில் ஏற்படும் சிந்தனைகளை எல்லாம் ஒரு நோட்டில் எழுதுங்கள். எல்லாவற்றையும் எழுதிமுடித்துவிட்டு பின்பு திரும்ப படித்தால், மனஅழுத்தம் ஏற்பட என்ன காரணம் என்பதும், அது விலகிச் செல்லாமல் நிலைத்திருப்பது ஏன் என்பதும் புரியும். அந்த மனஅழுத்தம் உங்கள் வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் தடைபோட்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்வீர்கள். நன்றாக சிந்தித்துப் பார்த்தால் உங்கள் மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் அந்த பிரச்சினையின் ஆணிவேர் எளிதாக புலப்பட்டுவிடும்.


நண்பனுக்கான பிரச்சினை

நீங்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும்போது, அதை உங்களுக்கான பிரச்சினையாக நினைத்தால் அது விஸ்வரூபம் எடுத்து,உங்களை பயமுறுத்தும். பயம் வந்துவிட்டால் யோசித்து முடிவெடுக்கும் நிதானத்தை இழந்துவிடுவீர்கள். அது பிரச்சினையின்வீரியத்தை அதிகப்படுத்திவிடும். அதனால், உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உங்கள் நண்பனுக்கு ஏற்பட்ட பிரச்சினையாக கருதுங்கள். அப்போது தடுமாற்றமின்றி நிதானமாக சிந்திக்கும் பக்குவம் வரும். சொந்த பிரச்சினைக்கு பல நேரங்களில் தாமதமாக தீர்வு கிடைப்பதை, நமது அனுபவத்திலேயே பலதடவை பார்த்திருப்போம். ஆனால் அடுத்தவர்கள் பிரச்சினைக்கு நாம் அதிரடியாக உடனடி தீர்வு சொன்னதும் நமது வாழ்க்கையில் நடந்திருக்கும்.

அந்த ‘லாஜிக்கை’ இதில் பிரயோகித்து, உங்கள் பிரச்சினையை நண்பனின் பிரச்சினையாக நினைத்து நிதானமாக சிந்தித்தால், விரைவாக உங்களாலேயே உங்களுக்கான தீர்வை கண்டுபிடித்துவிட முடியும்.


முந்தைய தீர்வுகள்

பிரச்சினைகள் உங்கள் வாழ்க்கையில் இப்போது மட்டுமல்ல, முன்பும் ஏற்பட்டிருக்கும். அதையும் கடந்துதான் நீங்கள் வந்திருப்பீர்கள். அதை எப்படி கடந்தீர்கள்? என்ற முந்தைய அனுபவங்களை நினைத்துப்பாருங்கள். அப்போது பயணம் மேற்கொண்டீர்களா? வித்தியாசமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டீர்களா? நல்ல புத்தகங்களை வாசித்தீர்களா? அதில் எது உங்கள் மனச்சுமையை குறைத்து, மனமகிழ்ச்சியை தந்தது என்பதை நினைவுபடுத்தி, மீண்டும் அவைகளில் மனதை செலுத்த முயற்சியுங்கள். உங்கள் மனதை எப்படி மகிழ்ச்சிப்படுத்துவது என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். உங்களுக்கு தேவையான மகிழ்ச்சியை மற்றவர்களால் ஊட்ட முடியாது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.


ஹார்மோன் விளையாட்டு

பயம், பதற்றம், கவலை போன்றவை மனதுக்குள் உருவாகும்போது உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். அதில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியை பெறவேண்டும் என்றால், உடனடியாக உடற்பயிற்சியை தொடங்கிவிடவேண்டும். அதற்காக ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருகில் உள்ள ஏதாவது ஒரு பூங்காவிற்கு சென்று காலாற நடந்தாலே போதுமானது. நீங்கள் நன்றாக உடற்பயிற்சி செய்தால், உடலில் பாசிட்டிவ்வான மாற்றத்தை உருவாக்கும் என்டோர்பின் ஹார்மோன் சுரக்கும். அது மனதில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். உடற்பயிற்சி, மகிழ்ச்சியின் மந்திரசாவி போன்று செயல்படுகிறது.


Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter