திருநங்கைகள் உலகம், அதிசயங்கள்... அதிர்ச்சிகள்.. மர்மத்தொடர்..
அத்தியாயம்: 1
ஆணாக பிறந்து... பெண்ணாக மலர்ந்தாள்...
அதிசயங்களும், ரகசியங்களும் நிறைந்தது மனித இனம். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த ஆண், பெண் இரண்டு பேர், 'உனக்கு நான் எனக்கு நீ’ என்று இணைகிறார்கள். வலது கால் எடுத்துவைத்து இல்லற வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள். கட்டுக்குள் வைத்திருந்த ஆசைகள் கட்டவிழ்கின்றன. இணைகிறார்கள், ஈருடல் ஓருயிர்.
என்ன அதிசயம். ஒரே நேரத்தில் 2 கோடி முதல் 20 கோடி உயிரணுக்கள் அவனிடமிருந்து அவளுக்கு இடம் பெயர்கிறது. அதில் ஐந்து சதவீதம் கருப்பையை நோக்கி நீந்திச் செல்கிறது. அவளது கருமுட்டை அதற்காக காத்திருந்தது. இரண்டும் இணைந்து கருப்பைக்குள் சங்கமம் ஆனது. அவள் தாய்மையடைந்தாள்.
பிறந்தது, குழந்தை. அழகாகத் தோன்றியது. அழகப்பன் என்று பெயரிட்டார்கள். அடுத்த இரண்டொரு நாளில், தாய்மையடைந்திருந்த பக்கத்து வீட்டுப்பெண் ஆணும், பெண்ணுமாக இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். மூன்று குழந்தைகளும் வளர்ந்து கொண்டிருந்தன.
மூன்று பேருக்குமே வயது 14 ஆனது. பக்கத்து வீட்டுப் பையன். எப்போதும் கண்ணாடி முன்னே நின்று கொண்டிருக்கிறான். கன்னத்தில் இளமையின் அடையாளமாக, முகப்பருக்கள். அவன் கைகள், இல்லாத மீசை முடியை நோக்கி மெதுவாகச் செல்கிறது. அழுத்தமாக மீசையை திருகுகிறான். அவன் குரலில் கரகரப்பு. தசைகளில் வலிமை. அப்பா செய்கிற வேலையை எல்லாம் அவரை விட வேகமாகச் செய்ய முடியும் என்று எப்போதும் வலு காட்டிக்கொண்டிருந்தான். அவன் ஆணாகி நின்றான்.
அவன் தங்கையான அவள், பட்டாம் பூச்சி போல் சிறகடித்து பறந்து கொண்டிருந்தவள், திடீரென்று அன்று அப்படியே மூலையில் அமர்ந்துவிட்டாள். வயதுக்கு வந்துவிட்டாள். முன்புபோல் அவள் துள்ளிக் குதித்து ஓடவில்லை. அவள் உடலுக்குள் எத்தனையோ குறுகுறுப்பு. மார்பகங்கள் மெல்ல மெல்ல வளரத் தொடங்கின. கொடி போல் இருந்த உடல் ஆங்காங்கே பள்ளம் மேடுகளாக வடிவம் பெற்றன. அவள் பெண்ணாகிவிட்டாள்.
அழகப்பன் மட்டும் உடலாலும், மனதாலும் குழம்பி நின்றான். பக்கத்து வீட்டில் உள்ள ‘அவன்' போலவும், இல்லை. 'அவள்' போலவும் இல்லை. இரண்டும் கலந்த கலவையாக. உடலால் ஆண். மனத்தால் பெண்.
திகில் தொடரும்..(12.3.2023-ல் வீடு மறந்தது.. விந்தை உலகம் வரவேற்றது..)
இத்தொடரை
யூட்யூபில் தொடர (YouTube):
https://www.youtube.com/@paulsuyambu
இன்ஸ்டாகிராமில் தொடர (Instagram):
https://www.instagram.com/paulsuyambuwriter/
பேஸ்புக்கில் தொடர (Facebook):
https://www.facebook.com/paul.suyambu/