New Series...

திருநங்கைகள் உலகம், அதிசயங்கள்... அதிர்ச்சிகள்.. மர்மத்தொடர்..




அத்தியாயம்: 5
அழகான அம்மாவும் அதிசய தாயும்..



மும்பையை நோக்கி ரெயில் வேகம் பிடித்து ஓடிக்கொண்டிருந்தது.

‘அழகப்பா இந்த உலகத்தில் ஒருத்தனுக்கு ஒரு தாய்தானே உண்டு'

'ஆமாம்.' என்று தலையசைத்தான்.

‘உனக்கு மட்டும் இரண்டு தாய். உன்னைப் பெற்ற தாய் ஊரிலே இருப்பாள். மும்பையில் உனக்கு இன்னொரு தாய் கிடைப்பாள். உன் வாழ்க்கையில் இனி கடைசிவரை அந்த தாய்தான் உடனிருப்பாள். உன்னை மகளாக்கிக்கொள்ள அங்கு பெரிய விழாவே நடக்கும்.'

அதைக் கேட்கவே அழகப்பனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘என் அம்மா ஒரே ஒரு குழந்தையாக என்னை மட்டும்தான் பெற்றெடுத்தாள். எனக்கு கிடைக்கப்போகும் இன்னொரு அம்மா மூலம் அக்காள், தங்கைகள் எல்லாம் கிடைப்பார்களா?’ ஏக்கத்துடன் கேட்டான்.

'உனக்கு கிடைக்கப்போகும் அக்காள், தங்கைகளை எண்ணவே முடியாது. அவ்வளவு பெரிய குடும்பம் உனக்கு சொந்தமாகி விடும்.'

மூத்த திருநங்கை சொல்லச்சொல்ல அழகப்பன் வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தான்.

தூக்கம் வரவில்லை. ஆனாலும் உடல் என்னவோ சோர்ந்து போயிருக்க, அப்பர் பெர்த்தில் தாவி ஏறினான். எதிர்புறத்தில் படுத்திருந்த நடுத்தர வயது ஆள் குறுகுறுப்பாக எட்டிப்பார்த்தார். படுத்து, போர்வையை எடுத்து, கழுத்து வரை மூடினான். புதிய தாயைப் பற்றிய சிந்தனையே மீண்டும் மீண்டும் அலை மோதியது.

ஊரில் இருக்கும் சொந்த தாய்க்கும், இனி கிடைக்கப்போகிற புதிய தாய்க்கும் என்ன வித்தியாசம் இருக்கும்!

பத்து வயதுவரை கடந்துபோன இனிமையான நாள்களை நினைத்துப் பார்த்தான். அம்மாவும், அப்பாவும், அவனும் சாலையில் நடந்து செல்லும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். எந்த ஆண் கடந்து போனாலும் அம்மாவை லேசாகவாவது திரும்பிப் பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள். அந்த ஊரிலே அம்மாதான் பேரழகு. 'அம்மா நீ ரொம்ப அழகு' என்று அழகப்பன் சொல்லும்போது அம்மா முகத்தில் கர்வம் கலந்த சிரிப்பு வரும்.

அவனை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்வாள். மூச்சுமுட்ட முத்தமெல்லாம் கொடுப்பாள்.

இதெல்லாம் பத்து வயதுவரை தான். என்றைக்கு அவன் அம்மாவின் பொருள்களை எடுத்து தன் ஆசையை தீர்த்துக்கொள்ளத் தொடங்கினானோ அன்றே, அழகான அம்மா அவனை அசிங்கமாகத் திட்டினாள். அருகில்கூட சேர்த்துக் கொள்ளவில்லை. நினைத்தபோதே கண்ணீர் துளிகள் கன்னத்தில் விழ, அதோடு சேர்ந்து அம்மாவின் நினைவுகளும் கரைந்தன.

புதிய அம்மா நினைவுகளில் நின்று கொண்டிருந்தாள். ஆனால் அவன் கற்பனையை எல்லாம் கூட்டிக்கலந்து சேர்த்துப் பார்த்தான். புதிய அம்மா முகம் அவன் நினைவுகளில் முழுமை பெறவேயில்லை. தூங்கிவிட்டான்.

அதே நேரத்தில் மும்பையின் ஒதுக்குப்புறமான பகுதியில் வசித்துவரும் வயதான திருநங்கை ஒருவர், அழகப்பனை மகளாக தத்தெடுக்க 'ரீத்' என்ற பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

திகில் தொடரும்.. (26.3.2023-ல் அவனை அவளாக்கும் விசித்திர சடங்கு...)

இத்தொடரை
யூட்யூபில் தொடர (YouTube): https://www.youtube.com/@paulsuyambu
இன்ஸ்டாகிராமில் தொடர (Instagram): https://www.instagram.com/paulsuyambuwriter/
பேஸ்புக்கில் தொடர (Facebook): https://www.facebook.com/paul.suyambu/

Copyright © Paul Suyambu. All Rights Reserved.