
மும்பையில் உள்ள திருநங்கைக்கு மகளாகிவிட்ட அழகப்பன், சபையினருக்கு மத்தியில் ஆனந்த கண்ணீர் வழிய அனைவரையும் கைகூப்பி வணங்கி நின்றான்.
அப்போது.
‘ஆகாசவாணி அறிய
பூமாதேவி அறிய
பெரியவங்க சின்னவங்க அறிய
நான், இந்த திருநங்கைக்கு மகளாக சம்மதம்!
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
துக்கத்துக்கும் கஷ்டத்துக்கும் இவள் கூடவே இருப்பேன்
இது சத்தியம் சத்தியம். சத்தியம்.' என்று மூத்த திருநங்கைகள் இசையோடு ராகத்தில் பாட, அழகப்பன் அதையே திரும்பச் சொல்லி சத்தியம் செய்தான். அதன் பிறகு ஜமாத்தை சேர்ந்தவர்கள் அவனுக்கு தண்ணீரும், புதுப்புடவையும் வழங்கினார்கள்.
இந்தச் சடங்கு நடந்துகொண்டிருந்தபோதே, அவசரமாக வெளியே செல்ல இருந்த சில திருநங்கைகள், ‘ சட்டாய்க்கு பாம்படத்தி' என்றுகூறி, பாயை தொட்டு வணங்கிவிட்டு வெளியேறினார்கள்.
ஜமாத் நடைபெறும்போது அவசர பணிக்காக வெளியேற விரும்பும் திருநங்கைகள் சபைக்கு மரியாதை தெரிவிக்கும் விதத்தில் ‘சட்டாய்க்கு பாம்படத்தி’ என்று கூறி அனுமதி பெற்றே வெளியேறுவார்கள். இது அவர்களது ஜமாத்தின் மரபாகும்.
தத்தெடுக்கப்பட்ட நிலையில் மெய்சிலிர்த்துப் போய் நின்றிருந்த அழகப்பனை மூத்த திருநங்கைகள் வாஞ்சையோடு சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் திருநங்கைகளின் நடத்தை, பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றி அழகப்பனுக்கு விளக்கினார்கள். அவன் கவனமாக அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான்.
அழகப்பனை அதுவரை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த 50 வயது திருநங்கை ஒருவர், அவன் அருகில் வந்து, ‘உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சு. நீ எனக்கு மருமகளாக சம்மதமா?' என்று கேட்டார்.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாத அழகப்பன், தனது தாயின் முகத்தை பார்த்தான்.
‘நான் உனக்கு தாய் ஆனதுபோல், அவள் உனக்கு அத்தை ஆக விரும்புகிறாள். திருநங்கைகள் உலகத்தில் நாங்கள் இப்படித்தான் உறவுகளை பெருக்கிக் கொள்வோம்’ என்று தாய் விளக்கினார்.
உடனே அந்த திருநங்கைக்கு மருமகளாக அழகப்பன் சம்மதித்தான். அந்த ஜமாத்திலேயே, அழகப்பனுக்கு அத்தை என்ற உறவும் கிடைத்தது. அழகப்பன் எல்லையில்லா சந்தோஷத்தில் மிதந்தான்.
அடுத்து தொடரில் நீங்கள் காண இருப்பது: அழகப்பன் அழகம்மை ஆனாள்..
இத்தொடரை
யூட்யூபில் தொடர (YouTube): https://www.youtube.com/@paulsuyambu
இன்ஸ்டாகிராமில் தொடர (Instagram): https://www.instagram.com/paulsuyambuwriter/
பேஸ்புக்கில் தொடர (Facebook): https://www.facebook.com/paul.suyambu/
Copyright © Paul Suyambu. All Rights Reserved.