New Series...

திருநங்கைகள் உலகம், அதிசயங்கள்... அதிர்ச்சிகள்.. மர்மத்தொடர்..




அத்தியாயம்: 9
அழகப்பன் அழகம்மை ஆனாள்..



ஒரே நேரத்தில் அம்மா, அத்தை ஆகிய இரண்டு புதுஉறவுகள் கிடைத்த சந்தோஷத்தில் அழகப்பன் உணர்ச்சி மேலிட நின்று கொண்டிருந்தான். அந்த விழாவுக்கு வந்திருந்த எல்லா திருநங்கைகளுக்கும் தண்ணீரும், சிற்றுண்டியும் தரப்பட்டது. ஒவ்வொருவரும் அழகப்பனிடம் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

அவனுக்கு சிலர் பரிசுகளை கொடுத்தனர். ஒவ்வொரு பரிசையும் தாங்கள் அருகில் நிற்கும்போதே பிரித்து பார்க்கச் சொன்னார்கள். அந்த பரிசுகளை பார்த்து அழகப்பன் சிலிர்த்தான். அவன் பல வருடங்களாக அணிய ஆசைப்பட்டுக் கொண்டிருந்த பெண்களுக்கான உள்ளாடை, ஜாக்கெட், தாவணி, புடவை, தோடு, கம்மல், மாலை போன்றவைகள் பரிசாக வந்து குவிந்தன.

‘யாராவது ஒருவர் இவைகளில் ஒன்றை வாங்கித்தந்தால்கூட அவர் தன்னிடம் இருப்பதில் எதைக்கேட்டாலும் கொடுத்துவிடலாம்' என்று எல்லாவற்றுக்கும் அவன் தயாராக இருந்து கொண்டிருந்த காலங்கள் உண்டு. இன்று ஒருவர் அல்ல, பலர் அவனது எதிர்பார்ப்புகளை பரிசுகளால் நிறைவேற்றுகிறார்கள். அவர்கள் பதிலுக்கு எதிர்பார்ப்பது அவன் நினைத்தது போல் வேறு எதுவும் இல்லை. அன்பை மட்டுமே எதிர்பார்த்தார்கள்.

அந்த பரிசு பொருட்கள் ஒவ்வொன்றையும் அணிந்து அழகப்பன் அழகு பார்த்தான். ‘இனி இவைகளை நான் அணிவதைப் பார்த்து யாரும் என்னிடம் கோபம் கொள்ளமாட்டார்கள். இவைகளை கழற்றினால்தான் சோறு போடுவோம் என்று மிரட்டவும் மாட்டார்கள்' என்று சந்தோஷமாக சொன்னான்.

தாய் திருநங்கை, அழகப்பனுக்கு ஆசைஆசையாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அந்த அலங்காரத்தோடு தன்னை கண்ணாடியில் பார்த்தபோது அவனுக்கு தான் ஒரு பெண்ணாக புது அவதாரம் எடுத்தது போல் இருந்தது

‘இப்போதிருந்து நீ திருநங்கை ஆகி விட்டாய். நீ ஒரு ஆண் என்ற எண்ணமே உனக்கு இனி ஒருபோதும் வரக்கூடாது. உனக்குள்ளே இருக்கும் பெண்மை இனி மலரும். இனி நீ அழகப்பன் அல்ல. அழகம்மை.' என்று தாய் திருநங்கை சொன்னார்.

அதை கேட்டு மெய்சிலிர்த்து போன அழகப்பன், ‘அழகம்மை. அழகம்மை' என்று தன்னை மறந்து கூச்சலிட்டு கத்தினான். ஆனந்த கூத்தாடினான்.

அடுத்து தொடரில் நீங்கள் காண இருப்பது: பலூன் மார்பகத்துடன் பட்டுப்புடவையில் ஜொலித்த அழகம்மை.

இத்தொடரை
யூட்யூபில் தொடர (YouTube): https://www.youtube.com/@paulsuyambu
இன்ஸ்டாகிராமில் தொடர (Instagram): https://www.instagram.com/paulsuyambuwriter/
பேஸ்புக்கில் தொடர (Facebook): https://www.facebook.com/paul.suyambu/

Copyright © Paul Suyambu. All Rights Reserved.