New Series...

திருநங்கைகள் உலகம், அதிசயங்கள்... அதிர்ச்சிகள்.. மர்மத்தொடர்..




அத்தியாயம்: 6
அவனை அவளாக்கும் விசித்திர சடங்கு..



ஆணாக பிறந்த அழகப்பன், பெண் போல நடந்து கொண்டதால் குடும்பமும் சமூகமும் அவனை புறக்கணித்தது. அதனால் வீட்டை விட்டு வெளியேறி, திருநங்கை ஒருவர் உதவியோடு ரெயிலில் மும்பை வந்தடைந்தான்.

ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கிய அவனை, ஆட்டோவில் ஏற்றி பரபரப்பான குடிசைப் பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த பகுதி முழுக்க திருநங்கைகள் நிரம்பி இருந்தனர்.

அவர்கள் குழுவாக பிரிந்து தங்களுக்குள் பேசி, சிரித்து விளையாடிக்கொண்டு இருந்தனர். சிலர் பார்வை மட்டும் மற்றவர்களை வசீகரிக்கும் விதத்தில் இருந்து கொண்டிருந்தது.

வளைந்து, நெளிந்து சென்ற ஆட்டோ ஒரு குடிசை வீட்டின் முன்னால் போய் நின்றது. அந்த திருநங்கை இறங்கி முன்னே நடக்க, அழகப்பன் பின்தொடர்ந்தான்.

‘வா இந்த வீடுதான்' என்று குடிசை ஒன்றை அடையாளம் காட்டினார், அந்த திருநங்கை.

அழகப்பன் உள்ளே நுழைந்து, நிமிர்ந்து பார்த்தபோது நெடுநெடுவென ஒரு திருநங்கை நின்றிருந்தார். 45 வயதிருக்கும். அழகப்பனை அப்படியே கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்தார். அவன் உடலுக்குள் ஏதோ ஒரு வித புது சக்தி இறங்குவதுபோல் ஜில்லிட்டுப்போய், அவர் கட்டுப்பாட்டுக்குள்ளே இறுகிக்கிடந்தான். தன்னிலை மறந்து அவர் தோளில் சாய்ந்துகொண்டான்.

சிறிது நேரம் கழித்து அந்த திருநங்கையே அவனை இயல்புநிலைக்கு கொண்டுவந்தபோது அவன் கண்கள் கலங்கி இருந்தன. மெல்ல அவன் உதடுகள் திறந்து மூடின. ‘அம்மா' என்று குழந்தை போன்று உருக்கமாக சொன்னான்.

அந்த திருநங்கை, அழகப்பன் கையைப் பிடித்து தன் அருகில் உட்காரவைத்து அவனது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். அவனும் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே வந்தான். அழகப்பனை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்த அந்த திருநங்கை, ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு! என் மகளாக உன்னை ஏத்துக்கிறேன்' என்று நெகிழ்ச்சியாக சொன்னார்.

மாலை நேரம் வந்தது. அந்த திருநங்கை அழகப்பனை தனது மகளாக தத்தெடுக்கும் 'ரீத்' நிகழ்ச்சிக்காக அந்த இடம் பரபரப்பாக செயல்பட்டது. அது, அமைதியான பரந்தவெளியாக காட்சியளித்தது. அங்கே பெரிய பெரிய பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. குழு குழுவாக இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு பிரிவு திருநங்கைகளுக்கு, அழகப்பனை தத்தெடுக்கும் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் குழுவின் மூத்த திருநங்கை தலைமையில் திரண்டு வந்திருந்தனர். விரிக்கப்பட்டிருந்த பாயை தொட்டு வணங்கிவிட்டு, அங்கிருந்த மூத்த அரவாணிக்கும் வணக்கம் செலுத்திவிட்டு பாயில் அமர்ந்தார்கள்.

புதிதாக ஒரு திருநங்கையை தங்கள் சமூகத்தோடு சேர்த்து, மகளாக தத்தெடுக்கும்போது, சுற்றுப்பகுதியிலுள்ள எல்லா திருநங்கைகளுக்கும் அவர் இன்னாரது மகள் என்று தெரிய வேண்டும் என்பதற்காக, அத்தனை குழுக்களையும் அங்கே அழைத்து விடுகிறார்கள். இப்படி திருநங்கைகள் அனைவரும் ஒன்றுகூடும் கூட்டத்திற்கு ஜமாத் என்று பெயர்.

ஜமாத் கூடியது. உடனே எல்லா திருநங்கைகளும் தங்கள் புடவை முந்தானையை இழுத்து தலையில் முக்காடு போட்டுக் கொண்டார்கள். ஒருவர் தாம்பாளம் ஒன்றில் வெற்றிலை பாக்குடன் 5 ரூபாயையும், 25 காசு நாணயத்தையும் வைத்து கூட்டத்தின் நடுவில் கொண்டுபோய் வைத்தார்.

அழகப்பனை மகளாக தத்தெடுக்கும் உச்சகட்ட நிகழ்ச்சி, திருநங்கை உலகத்திற்குள் இதோ இப்போது நடக்கப்போகிறது.

அடுத்து தொடரில் நீங்கள் காண இருப்பது: ஐந்தே கால் ரூபாய்க்கு மகளான அழகப்பன்.

இத்தொடரை
யூட்யூபில் தொடர (YouTube): https://www.youtube.com/@paulsuyambu
இன்ஸ்டாகிராமில் தொடர (Instagram): https://www.instagram.com/paulsuyambuwriter/
பேஸ்புக்கில் தொடர (Facebook): https://www.facebook.com/paul.suyambu/

Copyright © Paul Suyambu. All Rights Reserved.