New Series...

திருநங்கைகள் உலகம், அதிசயங்கள்... அதிர்ச்சிகள்.. மர்மத்தொடர்..




அத்தியாயம்: 4
ஓரப் பார்வையில் ஓராயிரம் அர்த்தம்..



இரவானது. அங்கேயே தூங்க அனுமதித்தார்கள். காலையில் அவர்கள் விழித்துப் பார்த்தபோது அழகப்பன் நித்திரையில் ஆழ்ந்திருந்தான். அவன் அணிந்திருந்த பேண்டும், சட்டையும் கழற்றி சுருட்டி ஒரு மூலையில் எறியப்பட்டிருந்தது. அவனோ பாவாடை தாவணியில் பெண்போல ஒருக்களித்து படுத்துக்கிடந்தான்.

விழித்தவனை திருநங்கைகள் வித்தியாசமாக பார்க்க, ‘நான் இன்றுதான் நானாக நிம்மதியாக தூங்கினேன்' என்று கண்களை கசக்கி தூக்கத்தை விரட்டியபோது, அவனை அறியாமலே கண்ணீர் வெளிவந்தது.

‘சரி இருக்கட்டும். உன்னை உன் பெற்றோர் ஒரு பெண் போல் பாவித்து நடத்தினால், இதே போல் உடுத்திக்கொள்ள உரிமை தந்தால் நீ அவர்களோடு உன் வீட்டிலேயே இருந்து கொள்வாய் தானே!’ 'இருந்துகொள்வேன். ஆனால் அது நடக்காதே. இந்த ஆடையை நான் கட்டி இருப்பது. அவர்களுக்கு அவமானம் என்பார்களே. அக்கம் பக்கத்தினர் எல்லாம் சின்னச் சின்ன பிரச்னை ஏற்பட்டால்கூட என் அம்மாவைப்பார்த்து, ‘எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தாளோ. இப்படி ஒரு பிள்ளையை பெத்துப் போட்டுருக்காளே' என்று அம்மாவை அழ வைப்பார்களே. நான் ஒரு நாள் அம்மாவின் ஜாக்கெட்டை அணிந்ததற்கே சூடு போட்ட அப்பா, இந்தத் தாவணியில் பார்த்தால் அடித்துக் கொல்லுவார். பிணமானால்கூட என்னை இந்த உடையில் விட்டுவைக்க மாட்டார்களே' என்றபோது அவனையும் மீறி அழுகை விம்மி வெளிவந்தது.

அழகப்பனிடம் நிறைய நிறைய பேசினார்கள். அவன் பிடிவாதமே தொடர சொந்தக் குடும்பத்தால் மிரட்டப்படும் நிலை உருவாக, மும்பை சென்று திருநங்கைகளோடு சங்கமமாகி, அந்த வாழ்க்கையையே ஏற்றுக்கொள்ள தயாராக்கினார்கள்.

மும்பை ரெயில் கிளம்பியது. வழிகாட்ட வந்த திருநங்கை புடவை உடுத்தியிருந்தார். அழகப்பன் பாவாடை தாவணியுடன் அமர்ந்திருந்தான். ஆண்கள் பார்வை தன் மீது படும்போதெல்லாம் தன்னை அறியாமலே அவன் கை, தன் தாவணியை மார்பை மறைக்கும் விதத்தில் இழுத்துவிட்டுக் கொண்டிருந்தது. மனத்தளவில் மட்டுமே வளர்ந்திருந்த மார்பகம்கூட அவனுக்குள் ஒரு மலர்ச்சியை தந்தது. தன்னைப் பார்த்த ஆண்களுக்கெல்லாம், பதிலாக ஓரப்பார்வையை சந்தோஷமாக வீசிவிட்டான்.

திகில் தொடரும்..(22.3.2023-ல் அழகான அம்மாவும்… அதிசய தாயும்...)

இத்தொடரை
யூட்யூபில் தொடர (YouTube): https://www.youtube.com/@paulsuyambu
இன்ஸ்டாகிராமில் தொடர (Instagram): https://www.instagram.com/paulsuyambuwriter/
பேஸ்புக்கில் தொடர (Facebook): https://www.facebook.com/paul.suyambu/

Copyright © Paul Suyambu. All Rights Reserved.