
அழகப்பனை திருநங்கை ஒருவர் மகளாக தத்தெடுக்கும் அபூர்வ நிகழ்ச்சி மும்பையில் இதோ நடக்கப்போகிறது. நாமும் அதில் பங்கெடுப்போம்.
தொண்டையை செருமிக்கொண்டே மூத்த திருநங்கை ஒருவர் எழுந்து, கரகரத்த குரலில் ஜமாத் எதற்காக கூட்டப்பட்டிருக்கிறது என்பதை விளக்கினார். அப்போது எல்லோரது பார்வையும் அழகப்பன் பக்கமாகத் திரும்பியது. அவன் எழுந்து நின்று அனைவரையும் கைகூப்பி வணங்கினான்.
‘நீ இதற்கு முன்பு எங்களைப் போன்ற கூட்டத்தில் யாருக்காவது மகளாகி இருக்கிறாயா?' என்று கேட்டார்.
‘இல்லை' என்று சொன்னான்.
‘யார் வீட்டிலாவது தண்ணீர் அருந்தியிருக்கிறாயா?' என்று கேட்டார்.
‘இல்லை' என்று பதில் சொன்னான்.
‘யார் தந்த புடவையையாவது கட்டி இருக்கிறாயா?' என்றும் கேட்டார்.
அதற்கும் ‘இல்லை.' என்று அழகப்பன் பதில் சொன்னான்.
(தண்ணீரை வாங்கிப் பருகுவதும், புடவையை சீராக பெற்று உடுத்துவதும் ‘ரீத்' சடங்கில் முக்கியமானது. அவர் வேறு எங்கேயாவது தத்து போயிருந்தால் அங்கே தண்ணீர் குடித்து, புடவை பெற்றிருப்பார் என்பது இதன் அர்த்தமாகும்.)
அழகப்பன் வேறு எந்த திருநங்கை கூட்டத்திலும் தத்து போயிருக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்பு, ‘ இந்தக் கூட்டத்தில் நீ யாரை தாயாக ஏற்றுக்கொள்ளப் போகிறாய்?' என்று கேட்டார்கள். அவன், தனக்கு தாயாகப்போகும் அழகான அந்த திருநங்கையை சுட்டிக்காட்டினான். உடனே அந்த திருநங்கையும் கூட்டத்திற்கு மத்தியில் எழுந்து நின்றார்.
தாயாகப் போகும் திருநங்கையைப் பார்த்து, ‘ இவரை நீ மகளாக ஏற்றுக்கொள்ள சம்மதம்தானா?' என்றனர். 'ஆம்' என்று அவர் சம்மதித்ததும் தாம்பளத்தில் இருந்த ஐந்தேகால் ரூபாயை இடதுகையால் எடுத்து தலைக்கு மேல் வைத்துக்கொண்டு,
‘தாயாகப் போகும் இந்த திருநங்கை, அழகப்பனை தனது மகளாக ஏற்றுக்கொள்கிறார். இதற்கு நீங்கள் அனைவரும் சம்மதம் தெரிவிக்கிறீர்களா?' என்று மூத்த திருநங்கை ஒருவர் சபையை நோக்கிக் கேட்டார்.
எல்லோரும் கையைத் தூக்கி சம்மதம் தெரிவித்ததும் அந்த காசை அதே தாம்பளத்தில் போட்டார். அதனை தாய் திருநங்கை எடுத்துக்கொண்டார். உடனே எல்லோரும் கரவொலி எழுப்பி ‘ தீன். தீன். தீன்.' என்று மூன்று முறை உற்சாக கூச்சல் எழுப்பினார்கள்.
திருநங்கைகளில் அந்த உணர்ச்சிக் கூச்சல் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது. அழகப்பன் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான்.
அடுத்து தொடரில் நீங்கள் காண இருப்பது: அழகப்பனுக்கு கிடைத்த புதுப்புடவையும்.. புது உறவுகளும்..
இத்தொடரை
யூட்யூபில் தொடர (YouTube): https://www.youtube.com/@paulsuyambu
இன்ஸ்டாகிராமில் தொடர (Instagram): https://www.instagram.com/paulsuyambuwriter/
பேஸ்புக்கில் தொடர (Facebook): https://www.facebook.com/paul.suyambu/
Copyright © Paul Suyambu. All Rights Reserved.