New Series...

திருநங்கைகள் உலகம், அதிசயங்கள்... அதிர்ச்சிகள்.. மர்மத்தொடர்..




அத்தியாயம்: 3
நாளை நடப்பது யாருக்கு தெரியும்..



அதிசய உலகம் அழகப்பனுக்காக அவ்வளவு எளிதாக திறந்துகொள்ளவில்லை. குடிசைக்குள் ஐம்பது வயதைக் கடந்த திருநங்கைகள் ஐந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோர் உடலும் உழைத்து வியர்வை வழிந்த நிலையில் களைத்துப் போயிருந்தது. அழகப்பன் ரொம்பவே அவர்களை ஊடுருவிப் பார்த்தான். அவர்கள் முகத்தில் அப்படி ஒன்றும் சந்தோஷம் இருந்திருக்கவில்லை.

'நேற்று ராத்திரி சமையல் வேலைக்கு போனோம். இன்றைக்கு சாயங்காலம் வரை ஆயிடுச்சு. ராத்திரி முழுக்க கண்ணு மூடலே. நெருப்புல காய்ஞ்ச்சிருக்கோம். ஆளுக்கு 300 ரூபாய்தான் கிடைச்சுது. இதைவிட்டா அடுத்த வாரந்தான் இன்னொரு கல்யாண சமையல்வேலை' என்ற மூத்த திருநங்கை, அழகப்பன் பக்கமாக திரும்பினார். 'நீ என்றைக்காவது சமையல் அறைப் பக்கம் எட்டிப் பார்த்திருக்கிறாயா?' என்றார்.

சமையல் அறைக்குள் புகுந்து விதவிதமாக சமைத்து, எல்லோரையும் சாப்பிட வைத்து அப்பாவிடம் சபாஷ் வாங்கவேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எத்தனையோ நாள்கள் இருந்ததுண்டு. ஆனால் பெண்தன்மை எங்கே தெரிந்தாலும் ஒட்ட நறுக்க அல்லவா அப்பா விரும்பினார். சமையல் அறைப்பக்கம் எட்டிப்பார்த்தாலே கொள்ளிக் கட்டையை அல்லவா தூக்கினார்.

‘பார்த்தாயா நீ வசதியுள்ள வீட்டுப்பிள்ளை. எங்களை மாதிரி ஆயிட்டேன்னா, சமையலுக்கு வரணும். சாப்பாட்டுக்கே திண்டாடணும். நெருப்புல காயணும். பேசாம அம்மாகிட்டே போயிடுப்பா' ‘நீங்க என்ன வேணும்னாலும் பேசிட்டு போங்க. ஆனா யாரா இருந்தாலும் என் உணர்வை அங்கீகரிக்கணும். என் உடலை அங்கீகரிக்கணும். அங்கேதான் நானிருப்பேன். என்னை அங்கீகரிக்கிறவங்களுக்காக நான் உயிரைக்கூட கொடுப்பேன். என்னை விரும்பாத இடத்தில் என் பிணம்கூட கிடக்காது' என்றான், ஆக்ரோஷமாக!

அவர்கள், திருநங்கைகளான தங்கள் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் கூறி, அவன் மனத்தை மாற்ற முயற்சித்துப் பார்த்தார்கள். அவர்கள் சொல்வதை அவன் காதுகள் கேட்டுக் கொள்ளவேயில்லை.

கடைசியாக, 'சரி நீ இங்கேயே தங்கிக்கொள். நாளை என்ன நடக்கப்போகுதோ அதை கடவுளே தீர்மானிக்கட்டும்' என்றார்கள்.

திகில் தொடரும்..(19.3.2023-ல் ஓரப் பார்வையில் ஓராயிரம் அர்த்தம்..)

இத்தொடரை
யூட்யூபில் தொடர (YouTube): https://www.youtube.com/@paulsuyambu
இன்ஸ்டாகிராமில் தொடர (Instagram): https://www.instagram.com/paulsuyambuwriter/
பேஸ்புக்கில் தொடர (Facebook): https://www.facebook.com/paul.suyambu/

Copyright © Paul Suyambu. All Rights Reserved.