நாற்பது வயதுக்கு மேலும் அழகில் நாயகிகளாக வலம்வர விரும்பும் பெண்கள் அதற்கு ஏற்ற சிறந்த வாழ்வியல் முறைகளை கடைப்பிடிக்கவேண்டும். பெண்கள் பெரும்பாலும் தங்கள் புற அழகைப்பற்றிதான் கவலைப்படுகிறார்கள். நாற்பது வயதுகளில் புறஅழகை மட்டும் மேம்படுத்திவிட்டால் நாயகிகள் போல் கட்டுக்கோப்பான உடலுடன் வலம் வர முடியாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுதான் மிக முக்கியம்.
நாற்பது வயதை கடக்கும்போது உடலில் ஆற்றல் குறைந்து, தசைகள் தளரத் தொடங்கிவிடும் என்பதை முப்பது வயதை கடக்கும்போதே பெண்கள் உணரவேண்டும். அப்போதே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தினால், நாற்பது வயதில் உடல்நலத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.
நாற்பது வயது பருவத்தில் பெரும்பாலான பெண்கள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருப்பார்கள். அதனால் உடல்வலு குறைந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அந்த காலகட்டத்தில் கால்சியம் மற்றும் புரதசத்து குறைபாடுகள் தோன்றும் என்பதால், அதை ஈடுகட்டும் விதத்திலான உணவுகளை பெண்கள் உண்ணவேண்டும்.
நாற்பது வயதுகளில் பெரும்பாலான பெண்களுக்கு உடல்பருமன் பிரச்சினை ஏற்படுகிறது. அது ஏற்படாமல் இருக்க வறுத்த, பொரித்த உணவுகள் உண்பதை வெகுவாக குறைத்திடுவது நல்லது. அதாவது முப்பது வயதை கடக்கும்போதே வீட்டில் சமையல் எண்ணெய்யின் தேவையை பாதியாக குறைத்திடவேண்டும். அசைவ விரும்பிகள் வாரத்தில் ஒருநாள் அசைவம், ஆறு நாள் சைவம் என்ற உணவுமுறையை கடைப்பிடிப்பது நல்லது.
நாற்பது வயதில் செரிமானத்திறன் குறையும் என்பதால் அளவோடு உணவை சாப்பிடவேண்டும்.
மதிய உணவில் சாதத்தின் அளவை குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்க்கவேண்டும். புடலை, பூசணி, அவரை, முட்டைகோஸ், பீன்ஸ் போன்றவைகளை சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய தேவைப்படும். அதனால் அந்தந்த சீசனில் கிடைக்கும் இரண்டு வகை பழங்களையாவது அன்றாடம் உட்கொள்வது அவசியம். தினம் ஒரு வகை கீரையை உணவில் சேர்க்கும் பழக்கத்தையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு, எப்போதும் புத்துணர்ச்சியோடு வலம்வர வேண்டும் என்றால், பெண்கள் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். உடற்பயிற்சியை தாங்களாகவே வீடுகளில் தொடங்குகிறவர்கள் புத்தகத்தை படித்தோ, டி.வி.யை பார்த்தோ பயிற்சியை ஆரம்பித்துவிடக்கூடாது. அனைவருக்கும் அனைத்துவிதமான பயிற்சிகளும் பொருந்தாது என்ற உண்மையை பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் உடல்வாகு மற்றும் உடல்நிலைக்கு தகுந்தபடியான உடற்பயிற்சிகளைதான் மேற்கொள்ளவேண்டும். அவரவர் உடல்நிலைக்கு ஏற்ற பயிற்சி எது என்பதை கண்டறிய, உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது. அத்தகைய ஆலோசனையை பெற வாய்ப்பில்லாதவர்கள் தினமும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். பெண்கள் குறிப்பிட்ட சில பயிற்சிகள் மூலம் கை, வயிற்றுப் பகுதி, தோள்பட்டை, புஜம், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் உள்ள தசைகளை கட்டுப்படுத்தலாம். அப்படி கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு கட்டுக்கோப்பான தோற்றம் கிடைக்கும்.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.