இந்தியாவில் 60 வயதைக் கடந்த தம்பதிகள் பல கோடி பேர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள், வாழ்க்கையில் பல்வேறு கடமைகளை முடித்த மனநிறைவோடு அமைதியாக வாழ முன்வரவேண்டும். மகிழ்ச்சியாக வாழவும் பழகிக்கொள்ள வேண்டும்.

60 வயதை கடந்த தம்பதியர்கள் மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டவேண்டும். கடந்த கால சோகங்களை திரும்பத் திரும்ப பேசுவது, மற்றவர்களை வெறுப்பது, எடுத்ததற்கெல்லாம் குறை சொல்வது போன்றவைகளை அவர்கள் தவிர்ப்பது அவசியம். முக்கியமாக, வயதில் மூத்தவர்கள் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தி சதா அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது.
முடிவெடுக்கும் அதிகாரத்தை குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடம் வழங்கிவிடுவது நல்லது. முதிய தம்பதிகள் தங்களுடைய அனைத்து அனுபவங்களும் மற்றவர்களுக்கு பயன்படும் என்று நினைத்து செயல்படக்கூடாது. பெரும்பாலும், அவரவர் அனுபவமே அவரவருக்குப் பயன்படும். ஒரு மனிதனின் வாழ்க்கை, அனுபவங்களைக் கொண்டு இன்னொரு மனிதன் வாழ முடியாது. இந்த உண்மைகளை புரிந்து தங்கள் அனுபவங்களை பிறர் மீது திணிக்காமலிருக்க வேண்டும்.
அறுபது வயதைக் கடந்தவர்களின் முதுமைக் காலம் குழந்தை பருவத்தை ஒத்ததாக இருக்க வேண்டும். விருப்பு வெறுப்பற்ற தூய்மையான உள்ளம் முதுமையை அழகுபடுத்தும். சுற்றியுள்ளவர்களையும் விரும்பச் செய்யும். இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் நேர்ந்திருக்கலாம். வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சோகம் நிகழ்ந்திருக்கலாம். அதையே நினைத்துக்கொண்டு எப்போதும் இது என்ன வாழ்க்கை என்று விரக்தியாக பேசுவது, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது, சுற்றியிருப்பவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்க நினைப்பது போன்றவைகளெல்லாம் முதுமைக்கு அழகில்லை.
வாழ்க்கை இனிமையானது. முதுமையில் மகிழ்ச்சி என்பது ஆரோக்கியமான விஷயம். உடலில் தோன்றும் பல்வேறு வியாதிகளுக்கு மனமே காரணம். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாவிட்டால் உடலில் நோய்கள் குடிகொண்டுவிடும். அது முதுமையை பாரமாக்கிவிடும்.
முதியவர்கள் எப்போதும் எரிச்சலாக பேசிக் கொண்டிருந்தால், எல்லோரும் அவர்களை விட்டு விலகி ஓடிவிடுவார்கள். அதனால் தனிமைதான் மிஞ்சும். ஏன் இந்த எரிச்சல்? எப்போதும் எரிச்சலடைந்து எதை சாதிக்கப் போகிறோம்? இதயக் கதவுகளைத் திறந்து விடுங்கள். மனம் லேசாகும். மகிழ்ச்சி கூடும்.
இளம் வயதில் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முதுமையில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இசை, இலக்கியம், கச்சேரி, தோட்ட வேலை, சுற்றுலா, ஓவியம் என்று மனதை மகிழ்விக்கப் பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் பிடித்தமானவற்றை செய்யுங்கள். உங்களுக்கான நட்புவட்டத்தையும் உருவாக்குங்கள்.
மற்றவர்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் உங்களால்தான் தர முடியும். அதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிக பெரிய உதவி என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்.
நமது நாட்டில் 60 வயது கொண்ட தம்பதிகளின் திருமண வாழ்க்கை சிறப்பு நிறைந்ததாக கருதப்படுகிறது. அது ஆனந்தம் நிறைந்ததாகவும் இருக்கிறது. போலந்து நாட்டில்
60 - வயது தம்பதியினரை அந்த நாட்டு ஜனாதிபதி விருது வழங்கி கௌரவிக்கிறார். தம்பதியினர் தங்கள் திருமணச் சான்றிதழுடன் விண்ணப்பித்தால் அவர்களை சகல மரியாதையுடன் அழைத்து விருந்தளித்து, மக்கள் முன்னிலையில் கௌரவப்படுத்துகிறார்கள்.
அந்த விருதினைப் பெற்ற போலந்து நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர், “நான் போரில் கலந்துகொண்டதால், இரண்டு முறை யுத்த பூமியில் சிக்கிக் கொண்டேன். அப்போது உயிரோடு திரும்புவதே எனக்கு சந்தேகமாக இருந்தது. அந்த நேரத்தில் என் மனைவி மற்றும் குடும்பத்தை நினைத்து நான் துடித்த துடிப்பு இன்றும் நினைவிருக்கிறது. அப்போது ஏற்பட்ட மனமாற்றம்தான் எனக்கு என் மனைவியை மதிக்க கற்றுத்தந்தது. நான் பெற்ற வெற்றிகளுக்கு என் மனைவிதான் காரணம். தனியாக என் குடும்பத்தைக் கட்டிக்காத்த அவளை, என் அறுபதாவது வயதில் அரசாங்கம் கௌரவிப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது“ என்றார்.
முதியவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக உலகில் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற விழாக்களை கொண்டாடி அவர்களை கௌரவிக்கிறார்கள்.
முதியவர்களில் சிலர், சதா எதைப் பற்றியாவது கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்தான் குடும்ப பொறுப்பு இருப்பதாக அர்த்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. மற்றவர்கள் பிரச்சினைகளுக்கு உங்களால் உதவ முடியாவிட்டாலும் சிந்தித்துத் தீர்வு கூற உங்களால் முடியும். மற்றவர்கள் சோர்ந்து போகும் நேரத்தில் உங்கள் வார்த்தைகளால் அவர்களை தூக்கிவிடவும் முடியும்.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.