அலைபாயும் மனதை கொண்டவர்களை அமைதிப்படுத்தவும், எப்போதும் இறுக்கமாக காணப்படுகிறவர்களை இதமாக்கவும் வெளிநாடுகளில் ‘குக்கிங்தெரபி’ என்ற, முறைப்படுத்தப்பட்ட சமையல் கலையை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
'குக்கிங் தெரபி' பெண்களின் மனநிலையில் குறிப்பிடத்தக்க அளவில் நல்ல மாற்றத்தை உருவாக்குவது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் மியூசிக்தெரபி, டான்ஸ்தெரபி, ஆர்ட்தெரபி போன்று இதுவும் மனநிலையை மேம்படுத்தும் ஒருவித புதிய சிகிச்சைமுறையாக பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள சிறைகளில் வாடும் பெண் கைதிகளில் ஏராளமானவர்கள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களில் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளான நூறு பேர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சமையல்கலையை முறையாக கற்றுக்கொடுத்து சமையலில் ஈடுபடுத்தினார்கள். முறைப்படுத்தப்பட்ட சமையல் கலை பயிற்சியும், அது தொடர்புடைய சமையல் செயல் முறையும் அவர்களது மன அழுத்தத்தை வெகுவாக குறைத்ததை ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட அவர்களிடம் சமையல் கலை, தன்னம்பிக்கை அளித்துள்ளதையும் கண்டுபிடித்தனர். அதனால்தான் இதற்கு ‘குக்கிங்தெரபி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சியை விஞ்ஞான ரீதியாக விரிவாக்கம் செய்யும் விதத்தில் கேக், பிரெட், சமோசா, பர்கர் போன்ற உணவுப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அப்போது சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களைவிட, உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள் குறைந்த அளவே மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்ற உண்மையும் தெரியவந்திருக்கிறது.
சமையல், படைப்புத்திறனோடு தொடர்புடைய கலை. ஆர்வத்தோடு சமைப்பவர்களிடம் கற்பனைத்திறன் அதிகமிருக்கும். அவர்கள் செய்யும் சமையல் மட்டும் ருசியாக இருப்பதில்லை. அவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் அவர்கள் திறமை பளிச்சிடும். அவர்கள் மற்றவர்களைவிட ரசித்து, சிறப்பாக தங்கள் வேலையை செய்துமுடித்து நல்ல பெயர் வாங்கிவிடுவார்கள். அதோடு எப்போதும் உற்சாகமாகவும் இருப்பார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சுயதொழில், நிதி நிர்வாகம், பொதுமக்கள் தொடர்பு போன்றவைகளில் சிறந்துவிளங்கும் பெண்கள் ருசியான உணவினை தயாரிக்கும் வல்லமை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
நாம் மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்கிறோம். சமையலில் ஒரே அளவில் சீராக காய்கறிகளை நறுக்குவது, அளவு மாறாமல் உணவுப் பொருட்களை சேர்ப்பது, மசாலாக்களை கலப்பது, வேகவைப்பது, வறுப்பது, பொரிப்பது போன்ற அனைத்தையும் முழு ஈடுபாட்டோடு செய்யும்போது மனம் அதில் ஒருநிலைப்படுத்தப்பட்டு, தியானம் போன்ற நிலையை அடைந்துவிடுகிறது.
நன்றாக சமைப்பவர்கள் கற்பனைத்திறனோடு புதிய புதிய உணவுகளை தயார் செய்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் புதிய தேடுதல் சிந்தனை இருந்துகொண்டே இருக்கும். அதனால் அவர்களது மூளையும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்.
வீட்டில் சமைப்பதை கடமையாகக்கொண்டு ருசிகரமாக சமைக்கும் பெண்களிடம் உணவினை ரசித்து, ருசித்து நிதானமாக சாப்பிடும் பழக்கமும் இருக்கும். இந்த நல்லபழக்கத்தால், அதிக அளவில் உமிழ்நீர் சுரந்து உணவோடு கலந்து அவர்கள் உடலுக்குள் செல்லும்.
நாம் உண்ணும் உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான் கணையத்தில் இன்சுலினை சுரக்கத் தூண்டும் மிகசிறந்த இயற்கை பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அவசரமின்றி, நிதானமாக உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்டால் உமிழ் நீர் அதிக அளவில் சுரந்து, உணவோடு கலந்து உடலுக்குள் சென்று நம்மை சர்க்கரை நோய் தாக்காமல் பாதுகாக்கும். ஊறுகாயை சிறிதளவு சுவைத்தும் உமிழ்நீரை அதிகம் சுரக்கச்செய்யலாம்.
இந்திய தாய்மார்கள் அவர்களது வீடுகளில் மரபுரீதியாக அன்றாடம் சமைப்பதால், அவர்களும் குக்கிங்தெரபியின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.