Articles

ஒரு கப் காபி பல மணி நேர உற்சாகம்

ஒரு கப் காபி
பல மணி நேர உற்சாகம்

coffee

ஒரு கப் காபியை கையில் வாங்கும்போதே பலரது மனதுக்குள் புத்துணர்ச்சி எட்டிப்பார்க்கும். அதை ரசித்து, ருசித்து பருகியதும் உடலெங்கும் உற்சாகம் ஊற்றெடுப்பதுபோல் தோன்றும்.

காபியில் உடலையும், மனதையும் ஒருசேர உற்சாகப்படுத்தும் ஆற்றல் இருப்பதுதான் அதற்கு காரணம். புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறவர்கள், ‘வாங்க ஒரு கப் காபி சாப்பிட்டுக் கிட்டே பேசலாம்’ என்று ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார்கள். காபி அவர்களுக்குள் ஆழமான நட்பை விதைக்கும். வீடுகளுக்கு வரும் உறவினர்களில் சிலர் பருகிவிட்டு, ‘உங்க வீட்டு காபி ரொம்ப சூப்பராக இருக்கிறது’ என்று கூறி, பாராட்டி உறவை வலுப்படுத்துவார்கள்.

காதலை வெளிப்படுத்த விரும்பும் இளசுகள் மத்தியிலும், கல்யாணத்தை உறுதிப்படுத்த முன்வரும் பெரியவர்கள் மத்தியிலும், பகைக்கு விடை கொடுத்துவிட்டு பாசத்தைக்காட்ட நினைப்பவர்கள் மத்தியிலும் காபி கோப்பைகளுக்கு முக்கிய இடம் உண்டு. காபி, உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி, உறவுகளை மேம்படுத்தி மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கிறது.

அதனால்தான் உலகம் முழுக்க பலரும் அதனை ருசிக்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு ஒரு கப் காபியோடுதான் அன்றைய பொழுதே விடிகிறது. இந்தியாவில் பலரும் காபியில் கெட்டியான பால் கலந்து, சர்க்கரையும் சேர்த்து பருகுகிறார்கள். ஆனால் பால், சர்க்கரை போன்ற எதுவும் சேர்க்காத ‘பிளாக் காபி’தான் உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகிறது. அதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ரைபோபிளோவின், பான்ராதைனிக் அமிலம், மங்கனீஷ், பொட்டாசியம், நியாசின் போன்றவை உள்ளன. பிளாக் காபியில் கலோரி இல்லை. ஆனால் அதில் பால், சர்க்கரை போன்றவைகளை சேர்க்கும்போது சத்துக்களில் மாறுபாடு ஏற்படுவதோடு, கலோரியும் உருவாகிறது. இதுதான் சிலருக்கு பிரச்சினையாகி விடுகிறது.

எந்த காபி என்றாலும், அதை அளவோடுதான் பருகவேண்டும். பெரியவர்கள், வீட்டில் தயாரிக்கும் காபிய ைதினமும் 4 கப் அளவுக்கு பருகலாம். ஒரு கப் என்பது 125 மி.லி. கொண்டது. நான்கு கப் பருகும்போது அதன் மூலம் 500 மி.லி. அளவுக்கு உடலில் கபீன் சேர்ந்துவிடும். அதற்கு மேல் கபீன் உடலில் சேருவது நல்லதல்ல. கர்ப்பிணிகள் காபியை தவிர்க்கலாம். அவர்கள் பருகித்தான் ஆக வேண்டும் என்றால் ஒன்றிரண்டு கப் போதுமானது.

காபியில் நிறைய வகைகள் இருக்கின்றன. பால் சேர்க்காமல் தயாராகும் காபிக்கு ‘எஸ்பிரஸோ’ என்று பெயர். அதில் சுடுநீர் கலந்து தயார் செய்யப்படும்போது அதன் பெயர் ‘அமெரிக்கானோ’ என்றாகிவிடுகிறது. இந்தியாவில் நிறைய பேர் ‘காப்பசினோ’ காபியை பருகுகிறார்கள். எஸ்பிரஸோ, ஸ்டீம்டு மில்க் இன்னும் சில வகையான பொருட்களை துல்லியமான அளவில் கலந்தால், காப்பசினோ ரெடி. காப்பசினோவில் கூடுதலாக சிலவகை பாலை சேர்த்தால், அது ‘கபேலாட்டே’ காபி ஆகிவிடும்.

coffee தென்னிந்தியர்களுக்கு பிடித்தமானது, பில்டர் காபி. தரமான காபி விதைகளை வாங்கி, வறுத்து, தூளாக்கி, அதில் சுடு நீர் கலந்து, பலமணி நேரம் வைத்திருந்து, காபி பில்டரை பயன்படுத்தி வடித்தெடுத்து பாரம்பரியமுறையில் பில்டர் காபி தயார் செய்யப்படுகிறது. இது, 1:3 என்ற கணக்கில் காபியும், பாலும் கலந்து தயாராகிறது. நினைத்த உடன் பருக ‘இன்ஸ்டன்ட் காபி’யும் உள்ளது. காபியின் சுவையை அறிந்து அதன் தரத்தை வகுக்க ‘காபி டேஸ்டர்’கள் என்ற பணியாளர்கள் இருக்கிறார்கள். அதிக சம்பளமும், மதிப்பும் நிறைந்த பணி இது.

காபியை நாம் பருகி முடித்ததும், அதில் உள்ள கபீன் ரத்தத்தில் கலந்து மூளையை சென்றடைகிறது. மூளையில் அடநோசின் என்ற நியூரோடிரான்ஸ்மீட்டர் செயல்பாட்டை கபீன் தடுக்கிறது. அதனால் மூளையில் நோர்எபிநெப்ரின், டோப்பமின் போன்றவைகளின் அளவு அதிகரிக்கும். அது நியூரான்களின் செயல்பாட்டை தூண்டும். இப்படி காபி, மூளையின் பல்வேறு செயல்பாடுகளை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுதான் உற்சாகத்திற்கான காரணம்.

காபியை அளவோடு பருகினால் ஆனந்தம்.. அளவைத் தாண்டினால் அவஸ்தை!


Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter