Articles

மகிழ்ச்சிக்கு ஒரு மந்திரசாவி

60-ல் குறையும் ருசி

அறுபது வயதை நெருங்குபவர்களுக்கு ருசியை அறிவதில் திடீர் பின்னடைவு ஏற்படுகிறது. அதனால் சில நேரங்களில் குடும்பத்தினர் எவ்வளவு சுவையாக சமைத்துக்கொடுத்தாலும், ருசியில்லை என்று வெளிப்படையாகவே கூறுவார்கள். நாக்கு ருசியின் தன்மையை அறியாமல் மரத்துப்போவதுதான் அதற்கு காரணம். அப்படி மரத்துப்போவது ஒரு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும்.

ஒருவர், சாப்பாட்டில் ருசியில்லை என்று அடிக்கடி கூறும் நிலை ஏற்பட்டால் அவர் மீது குடும்பத்தினர் தனிக்கவனம் செலுத்தவேண்டும். ருசி இல்லாவிட்டால் சாப்பாட்டில் ஆர்வம் இருக்காது. அதனால் அவர்கள் சாப்பிடும் உணவின் அளவு குறைந்துகொண்டே போகும். அதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும். உடல் எடையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும்.


இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் உடல் ஆரோக்கியம் குறைவது போன்று அவர்களது மன ஆரோக்கியமும் குறையும். மனந்தளர்ந்து போவார்கள். இதுபற்றிய உலகளாவிய ஆய்வு ஒன்று, ‘ருசியின்மையால் அவதிப்படுகிறவர்களில் பு5 சதவீதம் பேர் மட்டுமே, அதற்குரிய சிகிச்சையை பெற்றுக்கொள்வதாக’ கூறுகிறது. மீதமுள்ளவர்கள் அதனை அலட்சியப்படுத்திவிட்டு தங்கள் ஆரோக்கியத்தை இழக்கிறார்கள்.


நமது நாக்கில் ‘டேஸ்ட் பட்ஸ்’ எனப்படும் சுவை மொட்டுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. சுவையை உணர்த்துகின்ற அந்த அரும்புகள், நாக்கில் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். வயதாகும்போது சுவை அரும்புகளின் எண்ணிக்கை குறையும். அதனால் சுவை குன்றத்தொடங்கும்.


நாம் நாக்கு மூலம் உணவின் ருசியை நன்றாக உணரவேண்டுமானால் அதற்கு மூக்கின் ஆரோக்கியமும் அவசியமாக இருக்கிறது. ஜலதோஷம், தும்மலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது சாக்லேட் சாப்பிட்டால் நாக்கிற்கு அதன் இனிப்பு சுவை மட்டுமே தெரியும். மூக்கு ஆரோக்கியமாக இல்லாததால் சாக்லேட்டின் மணம் தெரியாது. மணமும், சுவையும் ஒன்றானால்தான் முழுமையான ருசியை அனுபவிக்க முடியும். அதனால்தான் ஜலதோஷம் இருக்கும் போது உணவின் முழு ருசியை அனுபவிக்க முடியாமல் தவிப்போம்.


ருசியின்மை தோன்றும்போது டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ருசியின்மை, வேறுசில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கிறது. காது, வாய், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளும், புற்றுநோயும் ருசியின்மையை உருவாக்கும். புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளித்தாலும் ருசியின்மை தோன்றும். தலையில் ஏற்படும் பலத்த காயங்கள், சிலவகை மருந்துகளின் பயன்பாடு, காது & மூக்கு & தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் போன்றவைகளும் ருசியின்மைக்கு காரணம். பற்களில் ஏற்படும் பாதிப்புகளும், ஈறு நோய்களும் கூட ருசியின்மைக்கு காரணமாக இருக்கின்றன. ருசி குறைந்தால், ஆரோக்கியமும் குறையும் என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்.


ருசியின்மையின் காரணத்தை அறிய காது – மூக்கு – தொண்டை நிபுணர், பல்சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர் ஆகியோரின் ஆலோசனை தேவைப்படும்.



Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter