Articles

மகிழ்ச்சிக்கு ஒரு மந்திரசாவி

ஆணுக்கு 18... பெண்ணுக்கு 16...

நமது அழகு, கம்பீரம், உடல் இயக்கம் போன்ற அனைத்துக்கும் காரணமாக இருப்பவை எலும்புகள். உச்சி முதல் கால் பாதம் வரையுள்ள அனைத்து எலும்பு கட்டமைப்புகளும் சரியாக அமைந்தால்தான் அழகாகவும், கம்பீரமாகவும் நம்மால் தோன்ற முடியும். எலும்புகள் சரியாக அமையாவிட்டால் எழுந்து நிற்க முடியாமல், காலியான கோணிப்பை போன்று ஏதாவது ஒரு மூலையில் முடங்கிக்கிடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.

உடலில் கால் எலும்புகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இரண்டு கால் எலும்புகளும் தரும் பலத்தில்தான் எழுந்து நிற்கிறோம். நடக்கிறோம்.. ஓடுகிறோம். கால் எலும்புகள் நம்மை தூக்கி சுமக்கும் சூழலில் நாம் கூடுதலான பொருட்களை சுமந்து, கால் எலும்புகளுக்கு கூடுதல் சுமையை கொடுக்கிறோம். சுமை தூக்கும் தொழிலாளர்களை பாருங்கள். 100 கிலோ எடை கொண்ட பொருட்களைகூட அவர்கள் தலையிலோ, முதுகிலோ சுமக்கிறார்கள். அந்த சுமையையும் கால் எலும்புகள்தான் தாங்குகின்றன.


நமது எலும்புகளின் தோற்றமும், வளர்ச்சியும் அதிசயமானது. தாய் வயிற்றில் கருவாக இருக்கும்போது ஒரு சிறு புள்ளியாகத் தான் எலும்புகள் காட்சியளிக்கின்றன. தாயின் சினைமுட்டையும், தந்தையின் உயிரணுவும் சந்தித்து கருக்குழாய் எனப்படும் பெலோபியன் டியூப்பில் கருவாகிறது. பின்பு அது நகர்ந்து கருப்பையை அடைந்து, கருப்பையின் சுவரை பற்றிப் பிடித்து வளரும். முதல் மாதத்தில் தாய் வயிற்றில் அது ஒரு திசுக்கூட்டம் போன்று காணப்படும். நான்காவது வாரத்தின் இறுதியில் சிசுவின் முக எலும்புகள் வடிவம் பெறும். 6- வது வாரத்தில் இருந்து எலும்புகள் வளரத் தொடங்குகின்றன.


சிசுவின் உடலில் தோன்றும் ஒவ்வொரு எலும்பின் முனையிலும் வளர்ச்சியை உருவாக்கும் ‘வளர்ச்சிக் குருத்து’உண்டு. அதுதான் எலும்புகளை வளரச் செய்யும். நாம் குழந்தையாக பிறந்தபோது பதினைந்து அங்குலமாக வளர்ச்சிக்குருத்தின் அளவு இருக்கும். நாம் பின்பு ஐந்தரை, ஆறு அடி உயரம் வரை வளர அந்த வளர்ச்சிக் குருத்துதான் துணைபுரிகிறது. ஆணாக இருந்தால் 18 வயது வரையும், பெண்ணாக இருந்தால் 16 வயது வரையும் எலும்புகள் வளரும்.



Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter