திடீரென்று வந்த இரண்டாவது குழந்தைக்கு முன்னுரிமை கிடைப்பதை கவனிக்கும் மூத்த குழந்தை, மனதளவில் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம். சில குழந்தைகள் சோர்வாகவும், இன்னும் சிலர் கோபமுகமாகவும் மாறிப்போக வாய்ப்பிருக்கிறது. கத்துவது, அழுவது, சேட்டை செய்வது என அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் திடீரென்று அப்படி மாறிப்போவதற்கு மற்றவர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சிதான் காரணம்.
சில குழந்தைகள் வளர்ச்சியில் பின்தங்கிப்போகும் வாய்ப்பு உண்டு. டம்ளரில் பால் குடித்துப் பழகிய அவர்கள், சிறுகுழந்தையாக இருந்தால்தான் கவனிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு மீண்டும் புட்டிப்பால் குடிக்கும் பழக்கத்திற்கு மாறுவார்கள். இதுபோல பேச்சிலும், நடவடிக்கைகளிலும் சில பின்னடைவுகள் ஏற்படலாம். பெற்றோர் அதை புரிந்துகொண்டு மூத்த குழந்தையிடம் பக்குவமாக நடந்துகொள்ளவேண்டும்.
பெற்றோரை பொறுத்தவரையில், அவர்கள் ‘தங்கள் முதல் குழந்தைக்கு பக்குவம் வந்துவிட்டது. எதையும் புரிந்துகொள்வார்கள்’ என்று தவறாக கணித்துவிடுகிறார்கள். ‘இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டாலும், முதலில் பிறந்ததும் அதுபோன்றதொரு குழந்தைதான் என்பதை பெற்றோர் மனதில்வைத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
“உன் மீதும் முன்புபோல் அன்பு வைத்திருக்கிறோம், என்பதை முதல் குழந்தைக்கு புரியவைக்கும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும். அதற்கு இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும். கர்ப்பிணியான தாயின் வயிறு பெரிதாகிக்கொண்டே வருவதுகூட முதல் குழந்தைக்கு வித்தியாசமாகத் தெரியும். தாயின் மேடான வயிற்றைத் தொட்டுப் பார்க்கவும், வயிற்றில் தட்டவும் அதற்குத் தோன்றலாம்.
ஒருவேளை தாயின் மேடான வயது மூத்த குழந்தைக்கு பயத்தையும் உருவாக்கலாம். அப்போதே முதல் குழந்தைக்கு உண்மையை புரியவைத்து, பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தை பற்றிய அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்துவதுடன், தன் சகோதரனை (அல்லது சகோதரியை) வரவேற்க முதல் குழந்தையை தயார் செய்ய வேண்டும்.
நான்காவது மாதத்தில் தாய்க்கு வயிறு பெரிதாகத் தொடங்கும். அப்போதே முதல் குழந்தையிடம், உன்னுடன் விளையாட ஒரு தம்பி (அல்லது தங்கை) தயாராகி வருகிறது என்று சொல்லவேண்டும். அப்போதிருந்தே அவர்கள் தன் உடன்பிறப்பை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இப்படி கர்ப்பத்திலிருந்தே மூத்த குழந்தையை சகோதர பாசத்திற்குப் பழக்கினால், அந்த குழந்தை இயல்பாகிவிடும்.
இரண்டாவது குழந்தைக்கு பொருட்கள் ஏதாவது வாங்கச்சென்றால், மூத்த குழந்தையையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். பாப்பாவுக்கு எந்த உடையை தேர்வு செய்யலாம், எந்த பொம்மையை வாங்கலாம் என்பது பற்றி மூத்த குழந்தையிடமும் ஆலோசனை கேளுங்கள். பாப்பாவுக்கு எது நன்றாக இருக்கும் என்று மூத்த குழந்தை கூறும் கருத்துகளுக்கு முன்னுரிமை தாருங்கள்.
பாப்பாவை தானும் தூக்கி வைத்துக் கொள்கிறேன் என்றுமூத்த குழந்தை கேட்டால், அதன்மடியில்பாதுகாப்பாக உட்காரவைத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள். இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களில் மூத்த குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அவர்களுக்கு தனிமையும் தவிப்பும் ஏற்படாது. குடும்பத்திலும் குழப்பம் ஏற்படாது” என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.