இரவில் தூங்கவிடாமல் பெரும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கும் கொசுக்கள், நோய்களை பரப்புவதிலும் முதலிடத்தில் இருக்கிறது. மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் உலகம் முழுக்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு வகைகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றில் நாலைந்து வகை கொசுக்களே மனிதர்களை கடிக்கின்றன.
கூர்ந்து கவனித்தால் மட்டுமே கண்ணில் படக்கூடிய கொசுறு போன்ற உயிரினமாக கொசு இருப்பதால் மனிதர்களின் கைகளில் எளிதில் சிக்காமல், மறைந்திருந்து கடித்து நோயை உருவாக்கும்.
பெண் கொசுக்கள்தான் நம்மைக் கடித்து தொல்லைகொடுத்து நோய்களை உருவாக்குகின்றன. பெண் கொசுக்களிடம் மட்டுமே மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கும் கட்டமைப்பு இருப்பது தான் அதற்கான காரணம். பெண் கொசுக்கள் நமது சருமத்தில் அமர்ந்ததும் இரண்டு விதமான குழாய்களை உடலுக்குள் செலுத்தும். ஒரு குழாய் வழியாக நமது ரத்தம் கெட்டியாகாமல் இருப்பதற்குரிய என்சைமை அதன் உடலில் இருந்து செலுத்தும். இன்னொரு குழாய் வழியாக அதற்கு தேவையான அளவு ரத்தத்தை நமது உடலில் இருந்து உறிஞ்சி எடுத்துக்கொள்ளும்.
இந்த இரண்டு செயல்களும் நடந்துகொண்டிருக்கும் போதே தனது உமிழ்நீரை நமது உடலுக்குள் செலுத்திவிடும். கொசு, இரண்டு விதமான தேவைகளுக்காக நம்மை கடிக்கிறது. நமது ரத்தத்தினை உறிஞ்சி எடுத்து தனது பசியை போக்கிக்கொள்வதோடு, தனது முட்டைகளுக்கு தேவையான புரோட்டினையும் நமது ரத்தத்தில் இருந்து பெற்றுக்கொள்கிறது.
கொசுவின் உமிழ்நீர்தான் மனித குலத்தின் மகாபெரிய எதிரி. அதன் மூலமாகத்தான் நமது ரத்தத்தில் நோய் அணுக்களை பரப்புகிறது. ‘கொசுவிடம் இருக்கும்போது அதற்கு எந்த பாதிப்பையும் உருவாக்காத நோய் அணுக்கள், மனித ரத்தத்தில் கலந்ததும், எப்படி நோய்களை உருவாக்குகிறது?’ என்ற கோணத்தில் நீண்ட நெடிய ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடந்துகொண்டிருக்கின்றன. கொசுக்களிடம் கடிவாங்கி, நோய்கள் உருவாகிய பின்பு சிகிச்சை பெறுவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது.
கொசு பற்றிய ஆராய்ச்சியில் மிக முக்கியமான விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. ‘மனிதர்கள் ஒவ்வொருவர் உடலும் தனித்துவம் வாய்ந்தது. சிலரது உடலில் கார்பன் டை ஆச்சைடு தன்மை அதிகமாக இருக்கும். அத்தகையவர்களின் உடலை தேடித்தேடி கொசுக்கள் கடிக்க வருகின்றன. குண்டான உடல்வாகு கொண்டவர்களையும், வியர்வை அதிகமாக வழிகிறவர்களையும் கொசு அதிகம் கடிக்கும்’ என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதிக சுறுசுறுப்புகொண்டவர்களையும் கொசுக்கள் விரும்பி வந்து கடிக்குமாம். நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்களும் கொசுக்களுக்கு அழைப்புவிடுப்பதுபோல் அமைந்துவிடுகின்றன என்றும் ஒரு சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
கொசுக்கள் பெரும்பாலும் மாலை நேரத்தில் தான் இரை தேடி வெளியே கிளம்பும். அந்த நேரத்தில் நாம் பாதுகாப்பான இடங்களில் அமர்ந்துகொள்ள வேண்டும். சுகாதாரமற்ற வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது. கை, கால்களை முழுமையாக மூடும் விதத்திலான ஆடைகளை அணியவேண்டும். நமது உடலில் வீசும் மணம் மற்றும் குறிப்பிட்ட சலனங்களை நுட்பமாக அறிந்தும் கொசுக்கள் கடிக்க முயற்சிக்கும். அதற்கு கொசுக்களுக்கு வெளிச்சம் தேவை. அதனால்தான் இரவில் ‘லைட்’ வெளிச்சத்தில் இருப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கின்றன.
இத்தகைய கொசுக்களிடம் இருந்து தப்பிக்க, வீட்டில் லைட் போடுவதற்கு முன்னால் ஜன்னல், கதவுகளை மூடிவிடவேண்டும். மூடிவிட்டால், கொசுக்களால் வீட்டின் உள்ளே வரமுடியாது. கை, கால்களை ஆன்டிபாக்டீரியல் வகை சோப்பினை பயன்படுத்தி சுத்தமாக கழுவவேண்டும். கொசு விரட்டிகளையும் பயன்படுத்தலாம்.
கடிக்கும் கொசுக்களை போராடி அடித்துக் கொல்வதைவிட வீட்டின் வெளியே அதை இனப் பெருக்கம் செய்யவிடாமல் தடுப்பதும், கடிப்பதற்கு வீட்டின் உள்ளே அனுமதிக்காமல் இருப்பதும்தான் நம்மை பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.