Articles

தேசத்தின் நலன்காக்கும்
சிறு வணிகர்கள்

தேசத்தின் நலன்காக்கும்
சிறு வணிகர்கள்

பேய் மழையோ, பெரும் புயலோ, கொரோனா போன்ற கொடுமையான நோய்களோ ஏற்படும்போது நாடு ஸ்தம்பித்து போகிறது. நாட்டு மக்கள் அப்போது அன்றாட உணவுக்குகூட திண்டாடும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அப்போதெல்லாம் மக்களுக்கு எப்படி எல்லாம் சேவையாற்ற முடியுமோ அப்படி எல்லாம் உதவுகிறவர்கள், சிறுகடை வணிகர்கள்.

இந்தியா முழுவதும் வாகனங்கள் நுழைய முடியாத குக்கிராமங்களின் தெருக்களில்கூட மக்களின் அன்றாட தேவைகளை சிறுவணிகர்கள்தான் நிறைவேற்றுகிறார்கள். வியாபாரத்திற்கு அப்பால் அவர்கள் இந்த சமூகத்திற்கு செய்யும் சேவைகளும் ஏராளம்.

சொந்த வீடு வாங்கவேண்டும் என்பதுதான், நகரங்களில் வசிக்கும் பலரது கனவு. ஆனால் நகரங்களில் லட்சங்களில் பணம்கொடுத்து வீடு வாங்க முடியாத நிலையில் இருக்கும் 98 சதவீத மக்கள் புறநகர் பகுதிகளை நோக்கி படையெடுக்கிறார்கள். வெகுதூரமானாலும் பரவாயில்லை குறைந்த விலைக்கு வீட்டு மனை ஒன்று வாங்கிவிடலாம் என்று நினைத்து, அவர்கள் ஆள்அரவமற்ற பகுதியாக இருந்தாலும் அதன் வழியாக கடந்து சென்றுகொண்டிருப்பார்கள். அங்கேயும் அவர்களுக்கு வழிகாட்ட ஒருவர், சிறுகடையினை வைத்து நடத்திக்கொண்டிருப்பார். அந்த பகுதிக்கு அவரது கடைதான் அடையாளமாக இருக்கும். கடைக்கு பெயர்கூட இருக்காது. ஆனால் பாசத்தோடு அவர் வரவேற்று, உபசரித்து, நல்வழி காட்டுவார்.

அந்த வணிகர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் என்ன என்பதும் தெரியாது. ஆனால் அவர் உடன்பிறந்த மூத்த சகோதரர் போன்று நல்வழிகாட்டுவதால், அவர் ‘அண்ணாச்சி’ என்றழைக்கப்படுகிறார். அவர் நடத்தும் கடை ‘அண்ணாச்சி கடை’ என்றழைக்கப்படுகிறது.

அடையாளம் தெரியாத இடங்களில் முதன்முதலில் காலடி எடுத்துவைக்கும் சிறுகடை வணிகர்கள் அந்த கிராமத்திற்கே வழிகாட்டிகளாகவும் ஆகி, அங்கு குடியேறும் மக்கள் சுயசார்பு பெறவும் ஊக்குவிக்கிறார்கள். குக்கிராமங்களில் தகவல்மையம் போன்று சிறுகடைகள்தான் இயங்குகின்றன.

புதிதாக கடைகளை திறக்கும் அவர்கள் முதல் வேலையாக அந்த பகுதியில் உள்ள அனைத்து தகவல்களையும் சேகரித்துவைத்துக்கொள்கிறார்கள். அந்த பகுதியில் வாழும் மக்களின் நல்லது கெட்டதுகளில் முதல் ஆளாக கலந்துகொள்கிறார்கள்.

அதனால் எந்த பகுதியில் யார் குடியிருக்கிறார்கள்? அவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் அவர்களுக்கு தெரிந்துவிடும். தேவைப்படுகிறவர்களுக்கு நம்பகமான அந்த தகவல்களை பகிர்ந்துகொண்டு நல்லது செய்கிறார்கள்.

இரவில் எத்தனை மணிக்கு கடையை அடைத்தாலும், அதிகாலையிலே எழுந்து அந்த பகுதி மக்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் தரம் பார்த்து வாங்கிவந்து, அவர்களது தேவைக்கு ஏற்றபடி நியாயமான விலைக்கு கைக்கு எட்டும் தூரத்தில் சிறு வணிகர்கள் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அவர்களுக்கு சமூக அக்கறை இருப்பதால்தான் தொடர்ந்து இந்த சேவையை செய்து வருகிறார்கள்.

‘பையனுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. பொழுதுபோகாமல் ஊர்சுற்றுகிறான். அவனுக்கு என்ன வழி காட்டுறதுன்னு தெரியலை..’ என்று கையை பிசையும் பெற்றோரிடம், ‘அட இதுக்கு போயி கவலைப்படுறீங்களே.. என் கடைக்கு வரச் சொல்லுங்கள். நான் பார்த்துக்கிறேன்..’ என்று நம்பிக்கை கொடுத்து, அவனுக்கு தொழிலோடு வாழ்க்கையையும் கற்றுக்கொடுத்து நாளைய முதலாளியாக அவனை உருவாக்குவதும், சிறுகடை வியாபாரிகள்தான். அப்படி லட்சக் கணக்கான முதலாளிகளை இந்தியாவில் சிறுகடை வியாபாரிகள் உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களால் பலகோடி பேர் வேலைவாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள்.

அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களின் பட்டினியை தாங்கிக்கொள்ள முடியாத சிறு வணிகர்கள் அவசரத்திற்கு உதவும் அன்பு நிறைந்தவர்களாகவும், ஆபத்துக்கு உதவும் கருணைமிக்கவர்களாகவும் வாழ்கிறார்கள். இயற்கை இடர்பாடு, நோய் தாக்குதல்களால் நாடே முடங்கிக்கிடந்தாலும் மக்கள் மனதில் நம்பிக்கை ஒளிக்கீற்றாய் சிறுகடை வணிகர்கள் திகழ்கிறார்கள். எப்பாடுபட்டாவது தங்கள் பகுதி மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை கொண்டு வந்து சேர்த்து, அவர்களது பசியை போக்கிவிடுகிறார்கள். அதனால்தான் இந்தியாவின் முதுகெலும்பாக சிறுகடை வணிகர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் அவர்கள் பெரும் பங்காற்றுகிறார்கள்.


Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter