Articles

புற்றுநோய்: தப்பிவிடலாம் எளிதாக

புற்றுநோய்: தப்பிவிடலாம் எளிதாக

பெண்களை பாதிக்கும் புற்றுநோய் வகைகளில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் இருந்தாலும், இப்போது பெரும்பாலானவர்களுக்கு தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்துவிடுவதால், சிகிச்சை பெற்று எளிதாக அதில் இருந்து தப்பிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதன் அறிகுறிகளை பற்றியும், சிகிச்சைகளை பற்றியும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதே அதற்கான அடிப்படை காரணமாகும். ஆனால் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தைராய்டு கேன்சர், மூன்றாம் இடத்தில் இருக்கும் கருப்பை வாய் கேன்சர் பற்றி பெண்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. அதனால் அந்த வகை புற்றுநோய்களின் பாதிப்பு அதிமாக இருக்கிறது.

தைராய்டு கேன்சருக்கான அறிகுறி என்னென்ன?

தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம்தான் முக்கிய அறிகுறியாக இருக்கிறது. கழுத்தின் முன்பகுதியில் இடம்பெற்றிருக்கும் இந்த சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை வெளியே இருந்து பார்த்து உணர முடியாது. வீக்கம் போன்று கழுத்திற்கு வெளியே தெரியும்போதுதான் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுகிறார்கள். ‘எப்.என்.ஏ.சி’ என்ற ஊசி பரிசோதனை வழியாக தைராய்டு புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறிகிறார்கள். பாப்பிலோரி கார்ஸினோமா தைராய்டு, பாலிகுலார் கார்ஸினோமா தைராய்டு போன்ற இருவகைகள்தான் பெண்களை அதிகமாக தாக்குகிறது.


இதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்னென்ன?

இந்த நோய் பாதிப்பு கொண்டவர்களில் 95 சதவீதம் பேர் சிகிச்சையால் குணமடைந்துவிடுகிறார்கள். புற்றுநோய் கட்டிகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றும் தைராயிடக்டமி என்ற சிகிச்சையே பரவலாக கையாளப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின்பு குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு ரேடியோஅயடின்தெரபி வழங்கப்படுகிறது. சாதாரண புற்றுநோய்க்கான கீமோதெரபி, ரேடியேஷன் போன்றவை இந்தவித நோயாளிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. நோய் பாதித்தவர்களுக்கு தைராய்டு சுரப்பியை நீக்கம் செய்துவிடுவதால், அவர்கள் தைராய்டு ஹார்மோன் தேவைக்காக தைராக்சின் வகை மருந்துகளை சாப்பிடவேண்டியதிருக்கும்.


கருப்பை வாய் புற்று நோய் வராமல் தடுப்பது எப்படி?

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் இரண்டாம் இடத்தை இதுதான் பிடித்திருக்கிறது. வெளிப்புற உடல் சுத்தம், தாம்பத்ய தொடர்புக்கு பிந்தைய சுத்தம் போன்றவைகளால் இதனை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சுகாதாரமற்ற நிலையில் தாம்பத்ய தொடர்பு வழியாக பரவும் பாப்பிலோமா என்ற வைரஸ்தான், கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணம்.

இந்த நோய் பாதிக்காமல் இருப்பதற்கான தடுப்பூசி உண்டு. பெண்கள் வயதுக்கு வரும்போது இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டால் 90 முதல் 95 சதவீதம் வரை நோய் தாக்குதலில் இருந்து தப்பித்துவிடலாம். இரண்டு தடவை இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.


கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்?

ரத்தப்போக்குதான் இதன் முக்கியமான அறிகுறி. மாதவிலக்கு இல்லாத நாட்களில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக உஷாராகிவிடவேண்டும். தாம்பத்ய தொடர்புக்கு பின்பு பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே கவனிப்பது நல்லது. டாக்டரிடம் இந்த அறிகுறியை சொல்ல கூச்சப்படுவதால், இந்த நோய் முற்றி பெருமளவு பெண்கள் பாதிப்பிற்குள்ளாகிவிடுகிறார்கள். உறுப்பில் இருந்து வாடை வீசும் திரவம் வெளியேறுவதும் இந்த நோய்க்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.

பரிசோதனைகள் வழியாக இந்த நோயின் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும். தொடக்கத்திலேயே கண்டறிந்தால், ரேடியேஷன் மூலம் குணப்படுத்தி விடலாம். பிந்தைய நிலைக்கு அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபியும் தேவைப்படும். தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்திவிடலாம். சமச்சீரான உணவு, உடற்பயிற்சி, சரியான வாழ்வியல் முறைகளை மேற்கொண்டால் நோயின்றி ஆரோக்கியமாக வாழும் வாய்ப்பு அதிகரிக்கும்.

Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter