சாதம் மட்டுமின்றி, நாம் உணவில் சேர்க்கும் கூட்டு வகைகள், குழம்பு வகைகள், பதார்த்த வகைகள் அனைத்திற்குமான உணவுப் பொருட்களின் உற்பத்திக்கு பின்னாலும் விவசாயிகளின் வியர்வை சிந்திய கடும் உழைப்பு இருந்து கொண்டிருக்கிறது.
உணவு கொடுத்து உபசரிப்பது என்பது உலகம் முழுக்க உள்ள மனித சமூகத்தின் பண்பாடு. அதனால்தான் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி விழாக்கள் அனைத்திலும் உணவு கொடுத்து, விருந்து படைத்து உபசரிக்கிறோம்.
இதில் சுட்டிக்காட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், உலகம் முழுக்க நடக்கும் பெரும்பாலான விருந்து நிகழ்ச்சிகளில் சமைத்த உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. மனிதர்களின் பசி போக்க வேண்டிய அந்த மதிப்புமிக்க உணவுகள், யாருக்கும் பயன்படாமல் குப்பைத் தொட்டியை நிறைக்கின்றன. அதுபோல் பெரிய சூப்பர் மார்க்கெட்களிலும், கடைகளிலும் விற்பனையாகாத காய்கறி வகைகள், பழங்கள், மீன், இறைச்சி போன்றவைகளும் வீணாக்கப்படுகின்றன.
உலகம் முழுக்க இப்படி வீணாக்கப்படும் உணவுப் பொருட்களின் உத்தேச பண மதிப்பைக் கேட்டால் மலைத்துப் போவோம். வருடத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் உணவுப் பொருட்கள் வீணாகுவதாக சர்வதேச உணவுத் துறை சார்ந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன. கஷ்டப்பட்டு விவசாயிகள் உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டுவரும் பொருட்களை, மனித சமூகத்திற்கு பயன்படுத்தாமல் வீணாக்கப்படுவதை உலகம் சமூககுற்றமாகவே கருதுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்திலுமே பசிக்கு உணவு கிடைக்காத ஏழைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பட்டினி இறப்புகளும் இல்லாமல் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் காய்கறி, கனிகள், மாமிசம் போன்ற அனைத்திலுமே மூன்றில் ஒரு பகுதி வீணாகிறது அல்லது வீணடிக்கப்படுகிறது. விளைநிலங்களில் அறுவடை செய்யும்போதும், அறுவடை செய்வதை சந்தைகளுக்கு எடுத்து வரும்போதும், விற்பனை செய்யும்போதும், சமைக்கும்போதும், சமைத்த பின்பும் அந்த வீணடிப்பு தொடர்கிறது.
கிட்டத்தட்ட இந்தியாவின் மக்கள் தொகை அளவுக்கு உலகில் சத்துணவுக்கு அல்லாடும் ஏழைகள் ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் கோடிக்கணக்கான மக்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் யாருக்கும் பயன்படாமல் வீணாக விரயமாகிக்கொண்டிருக்க, சமூக நலன் விரும்பிகள் இரண்டையும் கவனத்தில்கொண்டு செயல்படத் தொடங்கினார்கள். ‘உணவு வகைகளை வீணாக்கி, கீழே கொட்டாதீர்கள். அவைகளை தேவைப்படும் ஏழைகளுக்கு சாப்பிடக்கொடுங்கள்’என்ற பிரசாரத்தை உலக அளவில் தொடங்கினார்கள். அது மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இதில் பின்லாந்து மக்களிடம் உருவான திட்டம் உலகை வெகுவாக கவர்ந்தது. பின்லாந்து மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பெயர்பெற்றவர்கள். மது அருந்துவது அவர்கள் கலாசாரத்துடன் ஒன்றிணைந்தது. அதனால் அவர்களது மனதைத்தொடும் விதத்தில் இந்த திட்டத்திற்கு ‘ஹேப்பி ஹவர்’என்று பெயரிட்டார்கள். அங்கு ஹெல்சிங்கி என்ற நகரில் உள்ள ‘எஸ் மார்க்கெட்’என்ற பெருவணிக நிறுவனத்தில் இருந்து, இந்த பசி போக்கும் திட்டம் உதயமாகியுள்ளது.
அந்த வணிக நிறுவனத்தில் தினமும் இரவு 9 மணிக்கு ஹேப்பி ஹவர் தொடங்கும். மறுநாளுக்கு தாங்காது என்ற நிலையில் இருக்கும் தரமான காய்கறிகள், பழவகைகள், இறைச்சி, மீன் போன்ற அனைத்தையும் 30 சதவீத தள்ளுபடி விலைக்கு விற்கிறார்கள். ஏற்கனவே அவைகள் பெருமளவு விலைகுறைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த 30 சதவீத தள்ளுபடி ஏழை மக்களால் வாங்கமுடிந்த நிலையில், பெரும் விலை குறைப்பாக இருக்கிறது.
பின்லாந்தில் இரவு 9 மணிக்கு மேல் நடக்கும் இந்த விலைகுறைப்பு விற்பனையை அங்குள்ள 900 சூப்பர் மார்க்கெட்டுகளில் கடைப்பிடிக்கிறார்கள். ஏழைகள், குறைந்த வருவாய் பிரிவினர்கள்கூட்டம் கூட்டமாக வந்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை அன்றாடம்வாங்கிச் செல்கிறார்கள். இதன் மூலம் ஏழைகளின் பசி நீங்குகிறது என்பதோடு, உணவுப் பொருட்கள் வீணாகுவதும் பெருமளவு தடுக்கப்படுகிறது.
இது போன்ற முயற்சிகளை தற்போது உலகில் பல்வேறு அமைப்புகளும், தனியார்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறார்கள். செல்போன் செயலிகளும் இதில் பெரும்பங்காற்றுகின்றன. தென்னாப்பிரிக்காவில் இயங்கும் செயலி ஒன்றுடன் சுமார் ஒன்றரை கோடி பயனாளிகளும், 25 ஆயிரம் ஹோட்டல்களும், ஏராளமான பேக்கரிகளும் இணைந்து செயல்படுகின்றன. அதன் மூலம் பெருமளவு உணவுப் பொருட்கள் வீணாகாமல், தேவைப்படுகிறவர்களிடம் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது.
உணவுப் பொருட்கள் வீணாகுவதை தடுக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை உலக அளவில் மேற்கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் செலினா ஜூல். ரஷியாவை சேர்ந்த இவர் ஏழ்மையின் காரணமாக டென்மார்க் நாட்டிற்கு வந்தார். சொந்த நாட்டில் உணவுக்கு ஏங்கிய அவர், டென்மார்க்கில் மிதமிஞ்சிய நிலையில் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை பார்த்து வியந்தார். அதே நேரத்தில் உணவுப் பொருட்களை அவர்கள் எக்கச்சக்கமாக வீணாக்குவதை பார்த்து அதிர்ச்சியடையவும் செய்தார்.
அதனால் அவர், ‘உணவை வீணாக்குவதை நிறுத்துங்கள்’என்ற பேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்தார். அதில் அவரை நிறைய பேர் பின்தொடர்ந்த நிலையில், அங்குள்ள வானொலியில் செலினாவை பேட்டி எடுத்தனர். டென்மார்க்கில் ‘ரெமா 1000’ என்பது, மிகப் பிரபலமான சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட். அதன் இயக்குனரான ஆண்டர்ஸ் ஜென்சன், செலினாவின் பேட்டியை பத்திரிகை ஒன்றில் பார்த்துவிட்டு அவரை சந்தித்தார். உணவை வீணாக்குவதை தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்தார்கள். அதன் மூலம் டென்மார்க்கில் ஒவ்வொரு தனி நபர்களும் விழிப்புணர்வு பெற்று, அளவோடு சமைத்தார்கள். உணவு வீணாக்கப்படுவது தவிர்க்கப்பட்டது.
இருவரும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரசாரத்தால் புதுமையான ஹோட்டல் ஒன்றும் டென்மார்க்கில் உருவானது. அதன் பெயர், லூப். அதாவது அந்த பகுதியில் உள்ள உணவுப் பொருட்கள் விற்பனை நிறுவனங்களும், பேக்கரிகளும் தங்களால் விற்க முடியாத எஞ்சிய, அதே நேரத்தில் கெட்டுப்போகாத உணவு வகைகளை தினமும் இந்த ஹோட்டலுக்கு வழங்குவார்கள். என்னென்ன பொருட்கள் வருகிறதோ அவைகளை பயன்படுத்தி அந்த ஹோட்டலின் சமையல் கலைஞர்கள் உணவுப் பொருட்களை சுவையாக தயார் செய்வார்கள். உணவு தேவைப்படுபவர்கள் வந்து, அதனை சாப்பிடுவார்கள். புசித்தவர்களின் பசி தீர்கிறது. உணவுப் பொருட்கள் வீணாகுவதும் தடுக்கப்படுகிறது.
இந்தியாவில், உணவை வீணாக்குவதை தடுக்கும் விழிப்புணர்வு பிரசாரம் பெருமளவு நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் மனதில் அது நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீடுகளில் அளவோடு சமைத்து, ஆனந்தமாக உண்போம். விழாக்களிலும், விருந்துகளிலும் உணவில் ஆடம்பரத்தை தவிர்ப்போம். உணவு வீணாகுவதை தடுப்போம்.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.