Articles

தொப்பைக்கு ‘குட் பை’

தொப்பைக்கு ‘குட் பை’

உடல் பருமனாக இருப்பவர்களைவிட தொப்பை இருப்பவர்களுக்கே இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று இதயநோய் நிபுணர்கள் கூறுகிறார்கள். தொப்பை இருப்பவர்களிடம் மது மற்றும் புகைப்பழக்கம் இருந்தால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்றும் சொல்கிறார்கள்.

தொப்பை உருவாகுவதற்கு கொழுப்பு படிவதுதான் காரணமாக இருக்கிறது. உடலில் எங்கெல்லாம் மென்மையான உறுப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கொழுப்பு படியும். ஆண்களின் அடிவயிறு அதிக மென்மையான பகுதியாகவும், அதிக வேலையில்லாத பகுதியாகவும் இருப்பதால் அங்கு கொழுப்பு சேர தொடங்குகிறது.


நினைப்பதை எழுதுங்கள்

பெண்களுக்கு அடிவயிற்றில் கர்ப்பப்பை இருப்பதால், அதன் செயல்பாடு பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்களது தொடைப்பகுதி மற்றும் பின்பகுதியில் கொழுப்பு சேர்கிறது. இது உடற்கூறுரீதியாக அதிசயமான விஷயமாகும். ஆண்களின் அடிவயிற்றில் எளிதாக கொழுப்புபடிவதால் பெண்களைவிட ஆண்களே தொப்பையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் ஆண்களை மாரடைப்பு அதிகம் பாதிக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. தொப்பையால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், சர்க்கரை நோய், புற்றுநோய், பக்கவாதம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தோன்றும். அதிக மனஅழுத்தம், மூட்டுவலி, பித்தப்பை கற்கள், கல்லீரல் பாதிப்பு போன்றவைகள் உருவாகவும் தொப்பை காரணமாக அமைகிறது.


தொப்பை கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, தைராய்டு போன்றவை தோன்றலாம். அவர்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்விலும் அதிக கவனம்காட்ட வேண்டும். நமது நாட்டில் பலர் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தாலும் தொப்பையுடன் காட்சியளிக்கிறார்கள். தொப்பை உருவாகிவிட்டாலே அவர்களையும் உடல்பருமன் கொண்டவர்கள் கணக்கில் சேர்த்துவிடுவார்கள்.


வயிற்றுப் பகுதியில் கொழுப்புடன் காணப்படுகிறவர்களை ஆப்பிள் மாடல் தொப்பை கொண்டவர்கள் என்றும், இடுப்பு மற்றும் பின்புறத்தில் கொழுப்புடன் காணப்படுகிறவர்களை பேரிக்காய் மாடல் தொப்பை கொண்டவர்கள் என்றும் அழைக்கிறார்கள். இதில் ஆப்பிள் மாடல் கொண்டவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.



Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter