Articles

புதினா: புத்துணர்ச்சியின் புதையல்

புதினா:
புத்துணர்ச்சியின் புதையல்

உணவுகளிலும், உணவுப் பொருட்களிலும் சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் புதினா சேர்க்கப்படுகிறது. புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தருவதிலும் புதினாவின் பங்களிப்பு அதிகம். அதில் ‘மென்தால்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுவே புதினாவின் அத்தனை ஆற்றல்களுக்கும் காரணமாக இருக்கிறது.

புதினாவில் 500-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அனைத்திலுமே உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை நிறைந்திருக்கிறது. இதனை சூடான டீயில் சேர்த்தும் பருக முடியும். குளிர்ச்சியான எலுமிச்சை சாறில் கலந்தும் பருகலாம். இரண்டுமே உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். அதனால் இது புத்துணர்ச்சியின் புதையலாகத் திகழ்கிறது.

சந்தைகளில் புதினா மலிவு விலையில் கிடைக்கும்போது அதனை அதிக அளவில் வாங்கி, உலரவைத்து தூளாக்கி வைத்துக்கொண்டு அதில் டீ தயாரித்து பருகும் வழக்கம் பல குடும்பங்களில் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, வாய்க்கு மணத்தையும் வழங்குகிறது. வாயில் வாடை வீசுவதாக கருதுகிறவர்கள் புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கு தேவையான ஆற்றலை தரும் வல்லமையும் புதினாவில் இருக்கிறது. மனஅழுத்தம் ஏற்படும்போதும் புதினா இலைகளை மென்று சாப்பிட்டால், இயல்பு நிலைக்கு விரைவாக திரும்ப முடியும். இதில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் எல்லோருமே சாப்பிடலாம். நுரையீரல் பிரச்சினை, ஜலதோஷத்தால் அவதிப்படுகிறவர்கள் புதினாவை அதிகம் பயன்படுத்தவேண்டும்.

புதினாவில் இருக்கும் வைட்டமின்- ஏ, மாங்கனீஸ், போலேட், இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு அதிக வலுவை தருகிறது. கண்பார்வை துல்லியமாவதற்கும் இது உதவுகிறது. ஜீரண பிரச்சினை இருப்பவர்கள் உணவில் அன்றாடம் புதினாவை சேர்த்துக்கொள்வது நல்லது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் புதினா ஏற்றது.


Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter