நாவல் பழம் மருத்துவ மகத்துவம் நிறைந்தது. அதில் உடலுக்கு வலுவையும், எலும்புகளுக்கு ஆற்றலையும் தரும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. சோடியம், தாமிரம், வைட்டமின் பி 1, பி 2, பி 6 போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
ரத்த சோகை இருப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும். நாவல் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் இருந்து இரும்பு சத்தை பிரித்தெடுக்கும் பணியை அற்புதமாக செய்து உடலுக்கு வலுவை ஏற்படுத்தும்.
நாவல் பழத்தில் ‘ஜம்போலினின்’என்ற ரசாயனம் காணப்படுகிறது. இது, உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் நாவல் பழம் சாப்பிடுகிறவர்களின் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நாவல் பழத்தை பத்திய மருந்துபோல் ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வாய்ப்புண்டு. சர்க்கரை நோய் பாதித்த தொடக்க நோயாளிகளுக்கு இது அதிக பலன்தரும். நாள்பட்ட சர்க்கரை நோயை கொண்டவர்கள் நாவல் பழ விதைகளை காயவைத்து, தூளாக்கி புளித்த மோரில் கலந்து சாப்பிடலாம் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
நாவல் பழத்தில் இருக்கும் குயுமின், சரும சுருக்கத்தை போக்கி இளமையான தோற்றத்தை தரும். உடலில் புதிய செல்களை புதுப்பிக்கும் திறனை நாம் ‘ஆன்டி ஆக்சிடென்ட்’செயல்பாடு என்று கூறுகிறோம். ஆப்பிள், கேரட், மாதுளை போன்றவைகளில் இந்த ஆன்டி ஆக்சிடென்ட் திறன் இருக்கிறது. அவைகளைவிட அதிகமாக நாவல் பழத்தில் ஆன்டிஆக்சிடென்ட் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது பல்வேறு விதமான தோல் நோய்களை கட்டுக்குள் கொண்டுவருவதோடு, சருமத்திற்கு பளபளப்பையும் தருகிறது. இதற்கு பசியை தூண்டும் ஆற்றலும் இருக்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளை போக்கும் திறன் நாவல் பழத்திற்கு இருக்கிறது. அதனால் பெண்கள் இதனை அடிக்கடி சாப்பிடவேண்டும். குறிப்பாக மாதவிடாய் நாட்களில் தவறாமல் உட்கொள்வது நல்லது.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.