தென்னிந்தியர்கள் உண்ணும் உணவுகளின் சிறப்புகள் பற்றி புதிய ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப் பட்டது. மணிப்பால் மருந்தியல் கல்லூரியும், மணிப்பால் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இந்த ஆராய்ச்சியில், நாம் வீட்டில் தயார்செய்யும் சாம்பாருக்கு குடல் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.
இந்த ஆராய்ச்சி முடிவு, மருத்துவ குணம் நிறைந்த நமது மசாலா வகைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். சாம்பாரில் மல்லிவிதை, வெந்தயம், மஞ்சள், மிளகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள், சிறிய வெங்காயம் போன்ற பலவிதமான பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
அவற்றில் இருக்கும் மருத்துவ குணங்கள் புற்றுநோய் கட்டிகள் உருவாகுவதை தடுக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் குடல் புற்றுநோயை ‘டைமெத்தில் ஹைட்ராக்சின்’ என்ற காரணிதான் உருவாக்குகிறது. சாம்பாரில் சேர்க்கப்படும் நமது பாரம்பரிய மசாலா பொருட்கள் அந்த காரணியை தொடக்க நிலையிலேயே சிதைத்து விடுகின்றன. அதனால்தான் சாம்பாரால் குடல் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. கூடவே அதனை குணப்படுத்தும் ஆற்றலும் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தற்போது மக்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு அவர்கள் பாரம்பரிய உணவுகளை சாப்பிட மறந்ததும், முரண்பாடான உணவுகளை சாப்பிடுவதுமே காரணம். முரண்பாடான சில வகை துரித உணவுகளால் அஜீரணம் ஏற்படுகிறது. மலச்சிக்கலும் தோன்றுகிறது.

நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு அஜீரணமே மூல காரணமாக இருக்கிறது. நமது உடல் உறுப்புகளில் குறிப்பிடத்தக்கது ஜீரணமண்டல கட்டமைப்பு. இது வாய் முதல் மலத்துவாரம் வரை 9 மீட்டர் நீளம் கொண்டது. நாம் உண்ணும் உணவுகள் அங்குதான் ஜீரணமாகிறது. வயிற்றுக்குள் மண்ணீரலுக்கு மேலேயும், உதரவிதானத்திற்கு கீழேயும் சற்று படுத்தநிலையில் இரைப்பை அமைந்திருக்கிறது. சுருக்குப் பை போன்று காணப்படும் இது, நாம் பசியோடு இருக்கும்போது 50 மி.லி. கொள்ளவு கொண்டதாகத்தான் இருக்கும். நாம் சாப்பிடும்போது விரிந்துகொடுத்து அதிகபட்சமாக ஒரு லிட்டர் அளவு உணவை உள்வாங்கிக்கொள்ளும். ஆனால் நம்மில் பலர் அதன் கொள்ளளவைவிட அதிக அளவில் சாப்பிட்டு இரைப்பைக்கு தொந்தரவு கொடுத்துவிடுகிறோம். இதுவும் ஜீரணத்திறனை பாதிக்கும். இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் என்பது சுரக்கிறது. அதன் உதவியால் நடக்கும் பல்வேறு வேதிச் செயல்களால் திட உணவுகள் கூழ்போல் மாறும். அதன் பின்புதான் அதில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படும்.
நாம் நமது பாரம்பரிய நோய் எதிர்ப்பு ஆற்றல் நிறைந்த உணவுகளை அளவோடு, நிதானமாக மென்று சாப்பிட்டால் ஜீரண வேலை சிறப்பாக நடக்கும். உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.